சாதி சான்றிதழ் கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

சாதி சான்றிதழ் கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2021-08-24 19:30 GMT
நெல்லை:
சாதி சான்றிதழ் கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

தர்ணா

நெல்லை மாநகராட்சி 8-வது வார்டு பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக இருப்பவர் பாலகங்காதர திலகர். இவர் நேற்று காலை தனது மூன்று குழந்தைகளுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அலுவலக வாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் கூறுகையில், “தாமிரபரணி ஆறு மாசுபடுவதை தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தாமிரபரணி ஆற்றில் பிளாஸ்டிக் பொருளை போடாமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தாமிரபரணி ஆற்றில் குப்பைகளை போடாமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்றார்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுத்தார்.

சாதி சான்றிதழ்

நெல்லை மாவட்ட சி.ஐ.டி.யு. செயலாளர் மோகன் தலைமையில் காட்டுநாயக்கர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். தங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கக்கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், நெல்லை மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காட்டுநாயக்கர் சாதியைச் சேர்ந்த குடும்பங்கள் பல ஆண்டு காலமாக வாழ்ந்து வருகிறோம். மாவட்டம் முழுவதும் பல பகுதிகளில் குடியிருந்து வருகிறோம். ஆரம்பக்கல்வி முதல் உயர்கல்வி வரை படித்து வருகிறோம். பள்ளி சான்றிதழில் காட்டுநாயக்கர் என்று சாதி பெயர் குறிப்பிடப்படுகிறது. ஆனால் எங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்படாமல் உள்ளது.
சாதி சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் பலர் நன்றாக படித்திருந்தும் அரசு பணிகளுக்கு செல்ல இயலவில்லை. எனவே தாங்கள் இதில் கூடுதல் கவனம் செலுத்தி இந்து காட்டுநாயக்கர் மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டுகிறோம்” என்று கூறியுள்ளனர்.

வியாபாரிகள்

நெல்லை மாநகர சாலையோர வியாபாரிகள் சங்க செயலாளர் மணிகண்டன், பொருளாளர் ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகம் வந்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர். அதாவது அவர்கள் விற்பனை செய்யக்கூடிய பொருட்களான பனியன், லுங்கி, துண்டு, துணிப்பை உள்ளிட்ட பொருட்களுடன் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், “40 வருடமாக நாங்கள் நெல்லை மாநகர பகுதியில் சில்லரை வியாபாரம் செய்து வருகிறோம். ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிக்காக நெல்லை டவுன் ரதவீதிகளில் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இதனால் எங்கள் வியாபாரம் பாதிப்படையும். எனவே எங்களுக்கு நெல்லை நயினார்குளம் கரைப்பகுதியில் நிரந்தர கடைகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்