மின்சாரம் தாக்கி முதியவர் பலி

சீர்காழி அருகே லாரி உரசியதில் மின்வயர் அறுந்து விழுந்ததால் மின்சாரம் தாக்கி முதியவர் பலியானார். அவரை காப்பாற்ற முயன்ற என்ஜினீயரும் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-08-25 17:41 GMT
சீர்காழி:
சீர்காழி அருகே லாரி உரசியதில் மின்வயர் அறுந்து விழுந்ததால் மின்சாரம் தாக்கி முதியவர் பலியானார். அவரை காப்பாற்ற முயன்ற என்ஜினீயரும் பரிதாபமாக இறந்தார். 
இதுபற்றிய விவரம் வருமாறு:-
மின்சாரம் தாக்கி முதியவர் பலி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திட்டை ரோடு சர்ச் அருகே நேற்று காலை ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ரோட்டின் மேலே சென்று கொண்டு இருந்த மின்வயரில் லாரியின் மேல் பகுதி உரசியது. 
இதில் ரோட்டின் குறுக்கே சென்ற மின் வயர் அறுந்து விழுந்தது. அந்த வயர் சாலையோரம் சைக்கிளில் சென்ற தில்லைவிடங்கன் ஊராட்சி கன்னிகோவில் தெருவை சேர்ந்த சிங்காரவேலு (வயது 75) என்பவர் மீது விழுந்ததால் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 
காப்பாற்ற முயன்ற என்ஜினீயரும் சாவு
அந்த நேரத்தில் அந்த வழியாக குளங்கரை பகுதியை சேர்ந்த லூர்துசாமி மகன் என்ஜினீயரான அரவிந்தன்(25) என்பவர் நடந்து வந்து கொண்டு இருந்தார். 
அப்போது சற்று தள்ளி சாலையோரம் முதியவர் ஒருவர் மயங்கி கிடப்பதாக நினைத்து ஓடிச்சென்று அவரை அரவிந்தன் தூக்கியுள்ளார். உடனே அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் மின்சாரம் தாக்கி அரவிந்தனும் சம்பவ இடத்திலேயே பலியானார்.
லாரி டிரைவருக்கு வலைவீச்சு
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மின்வாரிய பணியாளர்களை கொண்டு மின்சாரத்தை துண்டிக்க செய்தனர். பின்னர் மின்சாரம் தாக்கி பலியான முதியவர் சிங்காரவேலு, என்ஜினீயர் அரவிந்தன் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமாக லாரியை பறிமுதல் செய்ததுடன், தலைமறைவான லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள். 
மின்சாரம் தாக்கி முதியவரும், அவரை காப்பாற்ற சென்ற என்ஜினீயரும் பலியான சம்பவத்தால் அந்த பகுதியே மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தது.

மேலும் செய்திகள்