உரிமம் இல்லாத உணவு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை-கலெக்டர் எச்சரிக்கை

உரிமம் இல்லாமலோ அல்லது உரிமம் புதுப்பிக்காமலோ உணவகங்கள் மற்றும் உணவுப்பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்படுவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் மதுசூதன்ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2021-08-26 18:23 GMT
சிவகங்கை,

உரிமம் இல்லாமலோ அல்லது உரிமம் புதுப்பிக்காமலோ உணவகங்கள் மற்றும் உணவுப்பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்படுவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் மதுசூதன்ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வழிகாட்டுதல் கூட்டம்

சிவகங்கை மாவட்ட உணவுப்பாதுகாப்பு துறையின் மூலம் ஓட்டல் தொழில் செய்பவர்களுக்கான வழிகாட்டுதல் குழுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கி பேசியதாவது:-
உணவுப்பொருட்கள் பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் தயாரித்து மக்களுக்கு வழங்க வேண்டும். அனைத்து இடங்களிலும் உணவுப்பாதுகாப்புத்துறை வழிகாட்டுதலின்படி, உரிமம் பெற்று தகுந்த பாதுகாப்புத்தன்மையுடன் உணவுகள் தயாரிக்க வேண்டும்.மேலும் அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் ஆகியவற்றில் குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு உணவு தயாரித்து வழங்கப்படுகிறது.

உரிமம் பெற வேண்டும்

அதேபோல் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் பணியாளர்களுக்கு உணவுகள் தயாரித்து வழங்கப்படுகின்றன. இதுபோன்ற இடங்களில், மாவட்ட உணவுப்பாதுகாப்புத் துறை வழிகாட்டுதலின்படி அனுமதிச் சான்று பெற்று அதன்படி உணவுகள் தயாரிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்.
அதேபோல் தனியார் உணவகங்கள் மற்றும் பேக்கரிகள், உணவு திண்பண்டங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் தவறாமல் உணவுப்பாதுகாப்புத்துறையில் விண்ணப்பித்து உரிமம் பெற்றுத்தான் செயல்பட வேண்டும். அதேபோல் உரிமம் தவறாமல் புதுப்பிக்க வேண்டும். உரிமம் இல்லாமலோ அல்லது உரிமம் புதுப்பிக்காமலோ உணவகங்கள் மற்றும் உணவுப்பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்படுவது கண்டறிந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஆய்வு

மேலும் உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர் தலைமையில் வட்டார அளவிலான பாதுகாப்பு அலுவலர்கள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். அதேபோல் குறிப்பாக, கலப்படமற்ற பொருட்களை பயன்படுத்த வேண்டும். எந்தநிலையிலும் மக்களை பாதிக்கும் வகையிலான பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் நெகிழிப்பொருட்கள் விற்பனை செய்கிறார்களா? என்று அனைத்து வணிக நிறுவனங்களிலும் ஆய்வு செய்து தவறும் செய்யும் நிறுவனங்கள் மீது அதிகபட்ச அபராதம் விதிப்பதுடன், நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முரளிதரன், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் பிரபாவதி, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சரவணக்குமார், ராஜேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டன

மேலும் செய்திகள்