கோவில்பட்டி கோவில் விழாவில் 3 பெண்களிடம் 18 பவுன் சங்கிலி திருட்டு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

3 பெண்களிடம் 18 பவுன் சங்கிலி திருட்டு

Update: 2021-08-27 11:26 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் நேற்று நடைபெற்ற கோவில் கும்பாபிஷேக விழாவில் 3 பெண்களிடம் 18 பவுன் சங்கிலிகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
நகை திருட்டு
கோவில்பட்டி கடலைக்கார தெரு பத்திரகாளி யம்மன் கோயிலில் நேற்று காலை கும்பாபிஷேக விழா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 
விழாவில் கலந்து கொண்டு விட்டு வீட்டுக்கு சென்ற கோவில்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குருசாமி மனைவி பூங்கொடி (வயது 58) என்பவர் தனது கழுத்தில் இருந்த 9 பவுன் சங்கிலி திருடு போனது தெரியவந்தது.
 இதே போல கடலைக்கார தெருவை சேர்ந்த சக்திவேல் மனைவி கற்பகம் ( 62) என்பவரிடம் 6 பவுன் சங்கிலி, ஊருணி தெருவை சேர்ந்த பெரியசாமி மனைவி வான்மதி (56) என்பவரிடம் 3.5 பவுன் சங்கிலி ஆக மொத்தமாக  18½ பவுன் தங்கசங்கிலிகளை மர்மநபர்கள் கூட்டநெரிசலை பயன்படுத்தி பறித்துச் சென்றுள்ளனர். 
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
நகைகளை பறிகொடுத்த 3 பெண்களும் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகைகளை திருடிய மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
மேலும்,  துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன், இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் தலைமையில் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்