வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

Update: 2021-08-27 20:35 GMT
பெரம்பலூர்:

லஞ்சம் வாங்கப்படுவதாக புகார்
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே தண்ணீர்பந்தலில், பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் வாகன பதிவு, ஓட்டுனர் உரிமம் பெறுதல், வாகன தகுதி சான்று பெறுதல் உள்ளிட்ட நடைமுறைகள் நடைபெறுவதால் வேலை நாட்களில் எப்போதும் பரபரப்பாக காணப்படும். 
இந்நிலையில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகன பதிவிற்கு, ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு, வாகன தகுதி சான்று பெறுவதற்கு, விபத்துக்குள்ளான வாகனத்தை மீட்பது, ஆய்வின் போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை விடுவிப்பது உள்ளிட்டவைக்கு லஞ்சம் வாங்கப்படுவதாக பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
சோதனை
இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் துணை சூப்பிரண்டு ஹேமசித்ரா தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை 4 மணியளவில் பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்குள் அதிரடியாக நுழைந்து, அலுவலகத்தின் வாயில் கதவை பூட்டி உள்புறமாக தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
பின்னர் அலுவலகத்தில் இருந்த வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை-1 செல்வகுமார் மற்றும் அலுவலக ஊழியர்கள், இடைத்தரகர்களிடம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் துருவி, துருவி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின்போது சம்பந்தமில்லாத இடைத்தரகர்கள் சிலரை போலீசார் வெளியே அனுப்பினர்.
லட்சக்கணக்கில் பணம்...
மேலும் அலுவலர்கள், ஊழியர்கள், இடைத்தரகர்களிடம் இருந்து லட்சக்கணக்கான பணத்தை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. கைப்பற்றப்பட்ட பணம் கணக்கில் வராத பணமாக இருந்தால் வழக்குப்பதிவு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தெரிவித்தனர். மேலும் அலுவலகத்தின் எதிரே உள்ள ஓட்டுனர் பயிற்சி பள்ளி நிலைய இடைத்தரகர்களின் அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்