கோவில்களில் வெளியே நின்று பக்தர்கள் தரிசனம்

கோவில்களில் வெளியே நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Update: 2021-08-27 20:35 GMT
பெரம்பலூர்:

வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை...
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் வழிபாட்டு தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் வழிபாட்டுக்கு தடை விதித்து அரசு உத்தவிட்டுள்ளது. அதன்படி நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் பெரம்பலூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் மூடப்பட்டு காட்சியளித்தன. கோவில்களில் ஆகம விதிகளின்படி பூஜைகள் மட்டும் நடைபெற்றது. ஆனால் கோவிலுக்குள் பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் கோவிலின் வெளியே நின்று சுவாமியை வழிபட்டு சென்றனர்.
சிறுவாச்சூரில் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவிலுக்கு நேற்று தரிசனம் செய்ய உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் வந்த வண்ணம் இருந்தனர். ஆனால் கோவிலில் பக்தர்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால், அவர்கள் ஏமாற்றத்துடன் கோவிலுக்கு வெளியே நின்று அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்து சென்றனர்.
தேவாலயங்கள்- பள்ளிவாசல்கள்
இதேபோல் தேவாலயங்களிலும் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் அவர்கள் வீடுகளிலேயே பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பள்ளிவாசல்கள் மூடப்பட்டிருந்ததால் நேற்று மதியம் முஸ்லிம்கள் தொழுகையை, அவர்கள் இருந்த இடத்திலேயே மேற்கொண்டனர். வழிபாட்டு தலங்களில் நாளை வரை பொதுமக்கள் வழிபாட்டுக்கு தடை உள்ளது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வழக்கம்போல் வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படுவார்கள். இதேபோல் அடுத்த மாதமும் (செப்டம்பர்) 3, 4, 5-ந் தேதிகளிலும் வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபாட்டுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அரியலூர் மாவட்டத்தில்...
இதேபோல் அரசு உத்தரவின்படி அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன. நாளை(ஞாயிற்றுக்கிழமை) வரை வழிபாட்டு தலங்களில் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதையறியாமல் நேற்று கோவில்களுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றமடைந்து, கோவிலின் வெளியே நின்று சாமி தரிசனம் செய்தனர்.
மீன்சுருட்டி அருகே கங்கை கொண்ட சோழபுரம் கிராமத்தில் உள்ள மாமன்னர் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரகதீஸ்வரர் கோவிலை பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் அரசு உத்தரவின்படி நேற்று பிரகதீஸ்வரர் கோவில் மூடப்பட்டது தெரியாமல், ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்திருந்தனர். ஆனால் கோவில் மூடப்பட்டிருந்ததால், அவர்கள் வெளியே நின்று வழிபாடு செய்துவிட்டு, ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மேலும் செய்திகள்