கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொன்ற பெண்,கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை

கோலாரில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொன்ற பெண்ணுக்கும், அவரது கள்ளக்காதலனுக்கும் ஆயுள் தண்டனை விதித்து கோலார் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2021-08-27 20:38 GMT
கோலார்: கோலாரில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொன்ற பெண்ணுக்கும், அவரது கள்ளக்காதலனுக்கும் ஆயுள் தண்டனை விதித்து கோலார் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. 

கள்ளத்தொடர்பு

கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை சுபாஷ்நகரை சேர்ந்தவர் சோமநாத். இவர், தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ந் தேதி இவர் தனது வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுபற்றி ராபர்ட்சன்பேட்டை போலீசார், சோமநாத் மர்மமான முறையில் இறந்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் சோமநாத்தின் மனைவி அஸ்வினிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததும், அவர்களின் கள்ளக்காதல் விவகாரம் சோமநாத்துக்கு தெரியவந்ததால் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டு வந்ததும் தெரியவந்தது. 

கைது

இதையடுத்து போலீசார் அஸ்வினி மற்றும் சந்தோஷ்குமாரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போது கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த சோமநாத்தை, அஸ்வினி தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி உணவில் விஷம் வைத்து கொன்றதும், பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியதும் தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் அஸ்வினி, சந்தோஷ்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்கள் மீது கோலார் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 

ஆயுள் தண்டனை

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி சந்தோஷ் கஜனானபட் நேற்று தீர்ப்பளித்தார். இதில் சோமநாத்தை அஸ்வினி, தனது கள்ளக்காதலன் சந்தோசுடன் சேர்ந்து கொலை செய்தது நிரூபணமானதால் அவர்கள் 2 பேருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். 
இதையடுத்து போலீசார் அஸ்வினி மற்றும் சந்தோஷ்குமாரை கோலார் சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்