வழக்குகளை சமரசமாக முடிக்க வாய்ப்பு

சட்ட விழிப்புணர்வு முகாமில் வழக்குகளை சமரசமாக முடிக்க வாய்ப்பு உள்ளது என்று மாவட்ட முதன்மை நீதிபதி சுவர்ணம் ஜெ.நடராஜன் கூறினார்.

Update: 2021-08-28 12:31 GMT
தளி
சட்ட விழிப்புணர்வு முகாமில் வழக்குகளை சமரசமாக முடிக்க வாய்ப்பு உள்ளது என்று மாவட்ட முதன்மை நீதிபதி சுவர்ணம் ஜெ.நடராஜன் கூறினார். 
சட்ட விழிப்புணர்வு முகாம்
உடுமலையை அடுத்த அமராவதிநகரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பழங்குடியின மலைவாழ்மக்கள், குழந்தைகள், பெண்கள், மூத்தகுடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
முகாமிற்கு மாவட்ட முதன்மை நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் சுவர்ணம் ஜெ.நடராஜன் தலைமை வகித்தார். உடுமலை வட்டசட்டபணிகள்குழு தலைவர் மற்றும் சார்பு நீதிபதி மணிகண்டன் வரவேற்புரை ஆற்றினார். உடுமலை வக்கீல் சங்கத்தலைவர் ஸ்ரீதர் வாழ்த்துரை வழங்கினார். தலைமை குற்றவியல் நீதிபதி புகழேந்தி, மாவட்ட நீதிபதி மற்றும் நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் சுகந்தி, சப் கலெக்டர் அ.தாப்ரசூல் பயிற்சி, மாவட்ட சமூகநல அதிகாரி அம்பிகா ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். 
அதைத்தொடர்ந்து மாவட்ட முதன்மை நீதிபதி சுவர்ணம் ஜெ. நடராஜன் பேசியதாவது
வனச்சட்டத்தின்படி நிறைய உரிமைகள் மலைவாழ் மக்களுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.பள்ளிகள், அங்கன்வாடி, சுகாதாரம், சாலை, குடிநீர்வசதி உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் தரப்பட்டுள்ளது. அந்த உரிமைகள் உங்களுக்கு வந்து சேர வேண்டும் என்பதற்காக அடிக்கடி முகாம்கள் நடத்தி உரிமைகளை உங்களுக்கு வந்துள்ளதா என்றும், அதைப் பெற்றுத்தருவதற்காக வனத்துறை, வருவாய்த்துறையினர் கலந்துபேசி கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படும்.
மேலும் முகாம்கள் மூலம் நிவாரண பொருட்கள் உதவிகள் எளிதில் கிடைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும். இதுதவிர சட்ட உதவிகள் சம்பந்தமாக மாவட்ட மற்றும் வட்ட சட்டப்பணிகள் குழுவை அணுகி சட்டம் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். உங்கள் ஊரை சேர்ந்த, உங்களுடைய வீடு மற்றும் அருகில் உள்ளவர்களின் வழக்குகளை சமரசமாக முடிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதற்காக இதுபோன்றதொரு முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நலத்திட்ட உதவி
அதைத்தொடர்ந்து மலைவாழ்மக்களுக்கு ரேஷன்கார்டு, ஆதார் அட்டை மற்றும் நிவாரணப் பொருட்களை மாவட்ட நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகள் அதிகாரிகள் வழங்கினார்கள். அத்துடன் சட்ட பிரச்சினை சம்பந்தமான மனுக்கள் பொதுமக்களிடம் பெறப்பட்டது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி பிரஷ்னேவ் நன்றியுரை கூறினார். பின்னர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.அதன்பின்பு அங்கு அமைக்கப்பட்டிருந்த சித்தமருத்துவம், சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த முகாம்களை மாவட்ட நீதிபதி ஆய்வு செய்ததுடன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

-----

Reporter : L. Radhakrishnan  Location : Tirupur - Udumalaipet - Thali

மேலும் செய்திகள்