பரமத்திவேலூர் அருகே லாரியில் கொண்டு வரப்பட்ட 12 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல் 3 பேர் கைது

பரமத்திவேலூர் அருகே லாரியில் கொண்டு வரப்பட்ட 12 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல் 3 பேர் கைது

Update: 2021-08-29 09:09 GMT
பரமத்திவேலூர்:
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கலப்பட டீசல் விற்பனையை தடுக்க குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை கூடுதல் இயக்குனர் ஆபாஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மேற்பார்வையில் நாமக்கல் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜான்சுந்தர், போலீஸ் இன்ஸ்பெக்டர் திலகவதி, சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி ஆகியோர் பரமத்திவேலூர் அருகே உள்ள வீரணம்பாளையத்தில் நேற்று அதிகாலை வாகன தனிக்கையில் ஈடுபட்டனர். 
அப்போது வீரணம்பாளையத்தில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே சந்தேகத்திற்குரிய வகையில் நின்ற டேங்கர் லாரியை சோதனை செய்தனர். அந்த லாரியில் எவ்வித ஆவணமும் இன்றி சட்டவிரோதமாகவும், அதிக லாபம் ஈட்டுவதற்காகவும் 12 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த லாரி சேலம் மாவட்டம் சங்ககிரிக்கு கொண்டு செல்ல இருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. 
இதையடுத்து கலப்பட டீசலை பறிமுதல் செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி லாரி டிரைவரான திருவண்ணாமலை மாவட்டம் இராந்தகத்தை சேர்ந்த ஜெயசீலன் (வயது 36), திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை சேர்ந்த கிளீனர் குபேந்திரபாண்டியன் (35) மற்றும் பரமத்திவேலூர் அருகே கரையாம்புதூரை சேர்ந்த குணசேகரன் (49) ஆகிய 3 பேரை கைது செய்தனர். 
மேலும் சென்னை குறுக்குப்பேட்டையை சேர்ந்த மோகன்ராஜ் என்பவரை இந்த வழக்கு தொடர்பாக போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
=======

மேலும் செய்திகள்