செங்கல்களால் மறைத்து மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்; டிரைவர் கைது

செங்கல்களால் மறைத்து மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்த போலீசார், டிரைவர் கைது செய்தனர்.

Update: 2021-08-29 19:43 GMT
கீழப்பழுவூர்:

மணல் கடத்தல்
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஏலாக்குறிச்சி மெயின்ரோட்டில் திருமானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்நாதன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக செங்கல் ஏற்றி வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது சில செங்கல்களை அகற்றி டிராக்டருக்குள் பார்த்தபோது, மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து டிராக்டர் டிரைவரை பிடித்து விசாரித்தபோது, அவர் சுள்ளங்குடி கிராமத்தை சேர்ந்த கண்ணதாசனின் மகன் சிவசங்கர்(வயது 19) என்பதும், டிராக்டரின் உரிமையாளர் சுள்ளங்குடி கிராமத்தை சேர்ந்த கலியபெருமாள் என்பதும், அவர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருமானூர் ஒன்றிய துணை தலைவராக இருப்பதும், பல நாட்கள் இது போன்று டிராக்டரின் மேல்பகுதியில் செங்கல்களை வைத்து மணல் கடத்தியதும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவசங்கரை கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும் கலியபெருமாளை தேடி வருகின்றனர்.
சரக்கு வேன் பறிமுதல்
இதேபோல் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமழபாடி மெயின்ரோட்டில் இன்ஸ்பெக்டர் கோபிநாத் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அந்த வழியாக வந்த சரக்கு வேனை சாலையிலேயே நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதனை கண்ட போலீசார் அந்த சரக்கு வேனில் பார்த்தபோது, மணல் மூட்டைகள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து சரக்கு வேனை பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்