வேன்-மோட்டார்சைக்கிள் மோதல்; 2 என்ஜினீயர்கள் பரிதாப சாவு

திருவேங்கடம் அருகே வேனும், மோட்டார்சைக்கிளும் மோதிக் கொண்ட விபத்தில் 2 என்ஜினீயர்களும் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2021-08-29 21:01 GMT
திருவேங்கடம்:
திருவேங்கடம் அருகே ேமாட்டார் ைசக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் 2 என்ஜினீயர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

டிப்ளமோ என்ஜினீயர்கள்

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே கலிங்கப்பட்டி பஞ்சாயத்து பிள்ளையார்குளம் கீழ தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மகன் கார்த்திகேயன் (வயது 24). டிப்ளமோ என்ஜினீயரான இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு வந்த கார்த்திகேயன் சொந்தமாக 2 லாரிகளை வாங்கி வாடகைக்கு ஓட்டி வந்தார். மேலும் செங்கல் வியாபாரமும் செய்து வந்தார். திருவேங்கடம் அருகே காரிசாத்தான் பஞ்சாயத்து அடைக்கலாபுரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் காளிராஜ் (21). டிப்ளமோ என்ஜினீயரான இவர் கார்த்திகேயனின் லாரியை ஓட்டி வந்தார். இவரும், கார்த்திகேயனும் அண்ணன்-தம்பி உறவுமுறை ஆவர்.

ேவன்-மோட்டார் சைக்கிள் மோதல்

சங்கரன்கோவில் அருகே பெருங்கோட்டூரில் நடந்த உறவினரின் இல்ல விழாவில் கார்த்திகேயனும், காளிராஜும் நேற்று பங்கேற்றனர். பின்னர் மாலையில் அங்கிருந்து அவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். திருவேங்கடம் அருகே சத்திரகொண்டான் விலக்கு சாைலயோர வளைவில் திரும்பியபோது, அந்த வழியாக வந்த வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட கார்த்திகேயன், காளிராஜ் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

பரிதாப சாவு

உடனே அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கார்த்திகேயன் பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த காளிராஜுக்கு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவரும் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து திருவேங்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேன் டிரைவரான புளியங்குடி சிந்தாமணியைச் சேர்ந்த செல்வகுமாரை (53) கைது செய்தனர்.

மேலும் செய்திகள்