ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்து கொடுப்பது போல் முதியவரிடம் ரூ.86 ஆயிரம் மோசடி; வாலிபர் கைது

ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்து கொடுப்பது போல் முதியவரிடம் ரூ.86 ஆயிரம் மோசடியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-08-30 14:04 GMT
ரூ.86 ஆயிரம் எடுக்கப்பட்டதாக...
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அவுரிமேடு பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 65). இவர் நேற்று பிற்பகல் செய்யூர் தாலுகா பவுஞ்சூர் கிராமத்தில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்கச் சென்றார். அவருக்கு கண் பார்வை சரியாக தெரியாததால் அருகில் நின்ற ஒரு வாலிபரிடம் பணம் எடுத்து தரும்படி கேட்டார். அவரிடம் இருந்து ஏ.டி.எம். கார்டை வாங்கிய அந்த வாலிபர் ரூ.20 ஆயிரத்தை எடுத்துள்ளார். பிறகு தன்னிடமிருந்த வேறு ஒரு ஏ.டி.எம். கார்டை குமரேசனிடம் கொடுத்து உங்கள் கணக்கில் பணம் இல்லை என்று கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். வீடு வந்து சேர்ந்த குமரேசனின் செல்போனுக்கு ரூ.86 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இந்த மோசடி குறித்து உடனடியாக மதுராந்தகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சம்பவம் நடந்த அணைக்கட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யும்படி தெரிவித்தனர். இதையடுத்து குமரேசன் அணைக்கட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

கைது
சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்தநிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்படி மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு கவினா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் உட்பட போலீசாருடன் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்டமாக அந்த வங்கியின் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் பதிவாகியிருந்த காட்சிகளை கொண்டு அந்த நபரை தேடி வந்தனர். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட அந்த நபர் அணைக்கட்டு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட விழுதமங்கலம் கூட்ரோட்டில் காரில் சென்றுகொண்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

விரைந்து சென்ற போலீசார் அந்த காரை மடக்கி அதில் இருந்தவரை விசாரித்தனர். குமரேசனின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்த நபர்தான் அவர் என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர் கூடுவாஞ்சேரி பிரியா நகரை சேர்ந்த பெருமாள் (வயது 33) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ.53 ஆயிரம் 3 செல்போன்கள், மற்றும் பல்வேறு வங்கிகளின் 20 ஏ.டி.எம். கார்டுகள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. கல்பாக்கத்திற்கு வந்து அங்குள்ள ஒரு நகைக்கடையில் ரூ.46 ஆயிரத்துக்கு நகைகள் வாங்கியதும் தெரியவந்தது. போலீசார்் அவரை உத்திரமேரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுராந்தகம் கிளைச்சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்