சத்திரப்பட்டி அருகே செல்போன் கோபுரத்தில் ஏறி விவசாயி போராட்டம்

சத்திரப்பட்டி அருகே நீர்நிலைகளில் மண் அள்ளுவதை தடுக்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி விவசாயி நடத்திய போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-08-30 14:19 GMT
சத்திரப்பட்டி:
சத்திரப்பட்டி அருகே நீர்நிலைகளில் மண் அள்ளுவதை தடுக்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி விவசாயி நடத்திய போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
குளத்தில் மண் அள்ளும் கும்பல்
திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி அருகே காளிப்பட்டியில் உள்ள செங்குளம், நல்லதங்காள் ஓடை உள்ளிட்ட பல பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் அனுமதி பெற்று பொக்லைன் எந்திரம் மூலம் மண் அள்ளி வருகின்றன. ஆனால் செங்குளம், ஓடைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் ஆழம் தோண்டி மண் அள்ளுவதாக கூறி அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் கடந்த 28-ந்தேதி செங்குளத்தில் மண் அள்ளியதை காளிப்பட்டியை சேர்ந்த கலைச்செல்வன், கவியரசு உள்பட 8 இளைஞர்கள் செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர். அப்போது அங்கு மண் அள்ளிக்கொண்டிருந்த நபர்களுக்கும், புகைப்படம் எடுத்த இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுதொடர்பாக இரு தரப்பினரும் கொடுத்த புகாரின்பேரில் சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பொதுமக்கள் எதிர்ப்பு
இதற்கிடையே வழக்குப்பதிவு செய்யப்பட்ட கலைச்செல்வனின் தந்தையான விவசாயி சதாசிவம் (வயது 50) நேற்று சத்திரப்பட்டியை அடுத்த மாட்டுப்பாதை கிராமத்தில் உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். 200 அடி உயரமுள்ள அந்த செல்போன் கோபுரத்தில் அவர் பாதியளவு ஏறினார். அப்போது, பழனி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் ஆழம் தோண்டி மண் அள்ளி வருகின்றனர். இதனால் இயற்கை வளம் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து வருவாய்த்துறை, கனிமவளத்துறையிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. கடந்த 28-ந்தேதி மண் அள்ளுவதை செல்போனில் புகைப்படம் எடுத்த எனது மகன் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே நீர்நிலைகளில் மண் அள்ளுவதை தடுத்து நிறுத்த வேண்டும், 8 பேர் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும் என்று கோஷமிட்டார்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த சத்திரப்பட்டி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து சதாசிவத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் கீழே இறங்க மறுத்துவிட்டார். இதையடுத்து பழனியில் இருந்து தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு, செல்போன் கோபுரத்தை சுற்றிலும் வலை விரிக்கப்பட்டது. இதற்கிடையே பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சிவா அங்கு வந்து, சதாசிவத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதைத்தொடர்ந்து சதாசிவம் கீழே இறங்கினார். பின்னர் இதுபோன்று ஆபத்தான முறையில் போராட்டம் நடத்தக்கூடாது என்று சதாசிவத்தை போலீசார் கண்டித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் சத்திரப்பட்டி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்