மாமல்லபுரத்தில் ஆன்லைன் டிக்கெட் சேவை முடக்கத்தால் சுற்றுலா பயணிகள் அவதி

மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை பார்ப்பதற்கான ஆன்லைன் சேவை முடக்கம் அடைந்ததால் மையங்களில் நுழைவு சீட்டை பெற்று சுற்றுலா பயணிகள் புராதன சி்ன்னங்களை பார்த்து மகிழ்ந்தனர்.

Update: 2021-08-31 11:07 GMT
ஆன்லைன் டிக்கெட்
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க ஒரு நாளைக்கு 5 ஆயிரம் பார்வையாளர்கள் மட்டுமே தொல்லியல் துறையின் ஆன்லைன் சேவை நுழைவு கட்டண இணையதளம் இயங்குவது போல் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. அதனால் ஒரு நாளைக்கு தலா ரூ.40 கட்டணம் செலுத்தி 5 ஆயிரம் பயணிகள் மட்டுமே நுழைவு சீட்டுகளை ஆன்லைனின் பதிவு செய்ய முடியும். அதற்கு மேல் ஆன்லைன் டிக்கெட் சேவை இயங்காமல் முடங்கி விடும்.வார இறுதி நாளான நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) மாமல்லபுரத்தில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் திரண்டனர். நேற்று முன்தினம் ஆன்லைனில் முன்பதிவு தொடங்கிய ஒரு சில மணி நேரத்திலேயே 5 ஆயிரம் ஆன்லைன் டிக்கெட்டுகள் அனைத்தும் சுற்றுலா பயணிகள் மூலம் பதிவு செய்யப்பட்டன.

இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் மொபைல் போன்களில் ஆன்லைன் டிக்கெட் சேவை இயங்காததால் வெண்ணை உருண்டைக்கல் மற்றும் கடற்கரை கோவில், ஐந்துரதம் உள்ளிட்ட இடங்களில் உள்ள நுழைவு சீட்டு பார்கோடு பலகை அருகில் தங்கள் மொபைல் போன்களில் டிக்கெட் பதிவு செய்ய முயற்சி செய்து ஆன்லைன் சேவை இயங்காமல் முடங்கியதால் ஏமாற்றத்துடன் காத்திருந்தனர்.பின்னர் 5000 நுழைவு சீட்டும் பதிவு செய்யப்பட்ட தகவலை தொல்லியல் துறை பணியாளர்கள் தொல்லியல் துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். பின்னர் பயணிகளின் சிரமத்தை உணர்ந்து அவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்ப கூடாது என எண்ணிய மாமல்லபுரம் தொல்லியல் துறை நிர்வாகம் தற்காலிகமாக கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட இடங்களில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு அவர்களின் வேண்டுகோளை ஏற்று புராதன சின்னங்களை கண்டுகளிக்க தலா ரூ.40 பெற்று கொண்டு அதற்கான மையங்களில் நுழைவு சீட்டுகள் வழங்கப்பட்டது.

நுழைவு சீட்டுகளை பெற்று கொண்ட சுற்றுலா பயணிகள் புராதன சின்னங்களை பார்த்து ரசித்தனர்.

மேலும் செய்திகள்