ஐ.பி.எஸ். அதிகாரி என கூறி நாகையில், மோசடி செய்த வாலிபர் கைது

ஐ.பி.எஸ். அதிகாரி என கூறி நாகையில் மோசடி செய்த காஞ்சீபுரத்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-08-31 16:53 GMT
நாகப்பட்டினம்:
ஐ.பி.எஸ். அதிகாரி என கூறி நாகையில் மோசடி செய்த காஞ்சீபுரத்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பணம் கொடுக்காமல் சென்றார்
நாகை புதிய கடற்கரைக்கு செல்லும் சாலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முகாம் அலுவலகம் அருகே ஒரு பல்பொருள் அங்காடி உள்ளது. இங்கு மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கிளியனூர் கீழத்தெருவை சேர்ந்த செல்வம் மகன் விக்னேஸ்வரன்(வயது 26) என்பவர் கணக்காளராக வேலை பார்த்து வந்தார். 
சம்பவத்தன்று பல்பொருள் அங்காடிக்கு பொருட்கள் வாங்குவதற்காக காரில் ஒருவர் வந்தார். பொருட்கள் வாங்கிய பின்னர் அந்த நபரிடம், விக்னேஸ்வரன் பணத்தை கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர் நான் ஐ.பி.எஸ். அதிகாரி என்னிடமே நீ பணம் கேட்கிறாயா? எனவும், நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை தனக்கு தெரியும் எனவும் தெரிவித்து பணம் கொடுக்காமல் சென்றதாக தெரிகிறது. 
டி.ஐ.ஜி. என மிரட்டல்
இதுகுறித்து வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் விக்னேஸ்வரன் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். 
இதனிடையே கடந்த 28-ந்தேதி வெளிப்பாளையம் தம்பித்துரை பூங்கா அருகே பழக்கடை வைத்திருக்கும் ரவி என்பவரிடம் காரில் வந்த நபர்  ரூ.1,000-க்கு பழங்கள் வாங்கி உள்ளார். அதற்கு ரவி பணம் கேட்டதற்கு நான் டி.ஐ.ஜி. என கூறி மிரட்டி விட்டு சென்றுள்ளார். இது குறித்து ரவி வெளிப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.  
சுற்றி வளைத்து பிடித்தனர்
பல்பொருள் அங்காடி, பழக்கடை என 2 சம்பவங்களில் ஒரே நபர் தான் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து வெளிப்பாளையம் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வந்தனர். 
இந்த நிலையில் நேற்று நாகூர் அருகே மேலவாஞ்சூர் சோதனைச்சாவடி அருகே மோசடியில் ஈடுபட்ட நபர் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். 
பெண் இன்ஸ்பெக்டரின் கார் டிரைவர்
விசாரணையில் அவர், காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் தாலுகா ஜமீன்புதூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் மகேஷ்(35) என்பது தெரிய வந்தது. 
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மகேஷ், திருப்போரூர் போலீஸ் நிலைய பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் கார் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். அந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு பெற்று இன்ஸ்பெக்டராக நாகைக்கு வந்துள்ளார். அவருடன் மகேசும் நாகைக்கு வந்துள்ளார். 
கைது
மகேஷ் தனது பெயரை மகேந்திரவர்மா என்று மாற்றி கொண்டு, குஜராத், கொல்கத்தா, ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் டி.ஐ.ஜி.யாக வேலை பார்த்து வருவதாகவும், தான் பெண் இன்ஸ்பெக்டரின் கணவர் என கூறியும் நாகையில் பல்வேறு இடங்களில் இதுபோன்று மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. 
மேலும் போலீஸ் துறையில் உள்ள சிலரிடமும் பதவி உயர்வு வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், மகேசை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்