சட்டசபை கூட்டத்தில் மந்திரிகள் ஆஜராவதை உறுதி செய்யுங்கள் - பசவராஜ் பொம்மைக்கு சபாநாயகர் கடிதம்

சட்டசபை கூட்டத்தில் மந்திரிகள் ஆஜராவதை உறுதி செய்ய வேண்டும் என்று கோரி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு சபாநாயகர் காகேரி கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2021-08-31 21:17 GMT
பெங்களூரு:

மந்திரிகள் பதிலளிக்க...

  கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 13-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு சபாநாயகர் காகேரி நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

  சட்டசபை கூட்டம் நடைபெறும்போது சில மந்திரிகள், தங்களின் தொகுதி நிகழ்வுகளை குறிப்பிட்டு சபையில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோருகிறார்கள். சட்டசபையில் உறுப்பினர்கள் பொது பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பும்போது, அதற்கு சம்பந்தப்பட்ட மந்திரிகள் பதிலளிக்க வசதியாக சபையில் ஆஜராகாமல் இருப்பது சரியல்ல.

விலக்கு பெறலாம்

  மந்திரிகள் ஆஜராகாவிட்டால், உறுப்பினர்கள் தங்களின் கேள்விகளுக்கு பதில் கிடைக்காமல் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் மந்திரிகள் அனைவரும் சட்டசபை கூட்டங்களில் ஆஜராகி இருப்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். ஒருவேளை தங்களின் தொகுதியில் நிகழ்ச்சி இருந்தால், அதுகுறித்து அதிகாரபூர்வமான தகவலை குறிப்பிட்டு விலக்கு பெறலாம். அத்துடன் சம்பந்தப்பட்ட துறைகளின் உயர் அதிகாரிகள் சபையில் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
  இவ்வாறு காகேரி தெரிவித்துள்ளார்.

  இத்தகைய கடிதம், சட்டசபை விவகாரத்துறை மந்திரி மாதுசாமிக்கும் அவர் அனுப்பியுள்ளார்.

மேலும் செய்திகள்