பள்ளி, கல்லூரிகளுக்கு ஆர்வமுடன் வந்த மாணவ, மாணவிகள். ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி வரவேற்றனர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. ஆர்வமுடன் வந்த மாணவ- மாணவிகளுக்கு ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி வரவேற்றனர்.

Update: 2021-09-01 18:14 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. ஆர்வமுடன் வந்த மாணவ- மாணவிகளுக்கு ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி வரவேற்றனர்.

இனிப்பு வழங்கி வரவேற்பு

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தமிழகத்தில் 9, 10, 11, 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் காலை 8 மணி முதல் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வரஆரம்பித்தனர். அவர்களுக்கு உடல் வெப்பபரிசோதனை செய்யப்பட்டது.

 அனைவரும் முககவசம் அணிந்து வந்தனர். மேலும் வகுப்பறைகள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு இருந்தது. 
திருப்பத்தூர் மாவட்டத்தில் 58 மேல்நிலைப் பள்ளிகள், 57 உயர்நிலைப் பள்ளிகள், 30 நிதியுதவி பள்ளிகள் உள்ளது. இந்த பள்ளிகளில் 38,065 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். முதல் நாளான நேற்று 22,646 பேர் பள்ளிக்கு வந்திருந்தனர்.

சில பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆசிரியர்களும், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளும் இனிப்பு வழங்கி வரவேற்றனர். 
 
கலெக்டர் ஆய்வு

நாட்றம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்  கலெக்டர் அமர் குஷ்வாஹா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சமூக இடைவெளியை பின்பற்றி, மாணவர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து பள்ளிகளுக்கு வர வேண்டும். ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொண்டு கட்டாயம் முககவசம் அணிந்து பள்ளிகளுக்கு வர வேண்டும் என்றார்.

பின்னர் கொத்தூர் துணை சுகாதாரநிலையத்தை பார்வையிட்டு எத்தனை பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் என கேட்டறிந்தார். தின்னகோட்டை கிராமத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுத்த நபர்களுக்கு தடுப்பூசியின் நன்மைகள், அதன் அவசியத்தையும் விளக்கினார். நாட்டறம்பள்ளி தாசில்தார் பூங்கொடி, பள்ளி ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி

திருப்பத்தூர் தாலுகா மாடப்பள்ளி அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் பள்ளிகளில் ஊரக வளர்ச்சித்துறை திட்ட அலுவலர் செல்வராசு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மேலும் மாடப்பள்ளி கிராமத்தில் நடந்த தடுப்பூசி முகாமையும் ஆய்வு செய்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஆ.கோமேதகம், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லோகன், பொறியாளர் சேகர், ஊராட்சி செயலாளர் எம்.அண்ணாமலை உடன் இருந்தனர்.

வாணியம்பாடி

வாணியம்பாடி, ஆலங்காயம், அம்பலூர் திம்மாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவ-மாணவிகள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு சென்றனர். அவர்களை ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி வரவேற்றனர்.
வாணியம்பாடி- ஆலங்காயம் செல்லும் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்கள் நேற்று பள்ளி மைதானத்தில் ‘நன்றி' என்ற எழுத்து வடிவில் நின்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பெயர்களை கையில் ஏந்தியும் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்