கல்லூரி திறந்த முதல் நாளிலேயே வரம்பு மீறல்: பஸ் கூரையில் ஏறி மாணவர்கள் ஆட்டம்

கல்லூரி திறந்த முதல் நாளிலேயே பஸ் கூரையில் ஏறி ஆட்டம் பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Update: 2021-09-02 04:51 GMT
பஸ் கூரையில்...
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதையடுத்து கட்டுப்பாடுகளுடன் பள்ளி-கல்லூரிகள் நேற்று முதல் திறக்கப்பட்டன. கல்லூரிகள் திறந்த முதல் நாளிலேயே சில மாணவர்கள் வரம்பு மீறிய செயலில் ஈடுபட்டனர்.சென்னை எண்ணூர்-பட்டினம்பாக்கம் ‘6 டி’ வழித்தட மாநகர பஸ்சின் மேற்கூரையில் ஏறி நின்று 2 பேர் ஆடி-பாடியபடி ஆபத்தான முறையில் பயணித்தனர். மெரினா கடற்கரை காமராஜர் சாலை அருகே மாநகர பஸ் வந்தபோது அண்ணாசதுக்கம் போலீசார் 2 பேரையும் கீழே இறக்கி, போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.விசாரணையில் அவர்கள், எண்ணூர் பகுதியை சேர்ந்த எழிலரசன் (வயது 21), விக்னேஷ் (21) என்பதும், மாநில கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருவதும் தெரிய வந்தது. 2 மாணவர்களையும் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

அபாய சங்கிலி
அதேபோல் சென்னை சென்டிரலில் இருந்து திருத்தணி நோக்கி செல்லும் மின்சார ரெயிலில் கல்லூரி மாணவர்கள் கூச்சலிட்டபடி பயணம் செய்தனர். வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையம் வந்தபோது, சிலர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர். அங்கு வந்த ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.அதன்பிறகு கொரட்டூர் ரெயில் நிலையம் வந்தபோது மீண்டும் கல்லூரி மாணவர்கள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர். இதனால் திருத்தணி சென்ற அந்த மின்சார ரெயில் நின்று நின்று சென்றதால் காலதாமதம் ஏற்பட்டது.

அதேபோல் பெரம்பூர் பஸ் நிலையத்தில் பஸ் தினம் கொண்டாடுவதற்காக பேனருடன் காத்து நின்ற பச்சையப்பன் கல்லூரி மாணவர்களான மாதவரம், கொளத்தூர், ரெட்டேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 8 பேரிடம் செம்பியம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்