தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை

தியாகிகள் நினைவிடத்தில் பால்பூத் அமைக்க முயற்சிப்பதை கண்டித்து நகராட்சி அலுவலகத்தில் தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையில் ஈடுபட்டனர்.

Update: 2021-09-02 17:50 GMT
தேவகோட்டை, 
செப்.3-
தியாகிகள் நினைவிடத்தில் பால்பூத் அமைக்க முயற்சிப்பதை கண்டித்து நகராட்சி அலுவலகத்தில் தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையில் ஈடுபட்டனர்.
ஆவின் பால்பூத்
தேவகோட்டை தியாகிகள் பூங்கா அருகே சுதந்திர போராட்ட காலத்தில் உயிர் நீத்தவர்கள் நினைவாக அந்த இடம் விளங்கி வருகிறது. அந்த இடத்தில் ஏற்கனவே ஆக்கிரமிப்பு இருந்ததை முந்தைய சப்-கலெக்டர் ராஜேஷ் குமார் யாதவ் அகற்றினார். 
இந்தநிலையில் அந்த இடத்தில் முன்னாள் அ.தி.மு.க. நகராட்சி கவுன்சிலரின் கணவர் நகராட்சி மற்றும் காவல்துறை அனுமதி பெற்று ஆவின் பால் பூத் அமைக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். இதற்கு தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் திடீரென நகராட்சி அலுவலகத்தில் தி.மு.க. நகர செயலாளர் பெரி.பாலா, காங்கிரஸ் நகர் தலைவர்கள் வக்கீல் சஞ்சய், லோகநாதன் ஆகியோர் தலைமையில் ஏராளமானோர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அனுமதி ரத்து 
அதன் பின்னர் ஆணையாளர் (பொறுப்பு) மதுசூதனிடம் மனு கொடுத்தனர். அப்போது பால் பூத் அமைக்க அந்த இடத்தில் அனுமதி ரத்து செய்யப்படும் என ஆணையாளர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். 
இந்த முற்றுகை போராட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மீரா உசேன், முன்னாள் கவுன்சிலர்கள் ஜாகிர் உசேன், இளங்கோ, முன்னாள் தி.மு.க. நகர் செயலாளர் மதார்சேட், அன்பு, அரவிந்த், இளங்கோ, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சங்கர், செந்தில், சேட் உள்பட 50 பேர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்