மந்தாரக்குப்பம் அருகே வாலிபர் கொலை வழக்கில் நண்பர் கைது பரபரப்பு வாக்குமூலம்

மந்தாரக்குப்பம் அருகே வாலிபர் கொலை வழக்கில் அவரது நண்பர் கைது செய்யப்பட்டார். அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2021-09-03 17:24 GMT
மந்தாரக்குப்பம், 

பிணம்

நெய்வேலி நிலக்கரி 2-வது சுரங்கம் முன்பு உள்ள முட்புதரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். 
இது குறித்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இறந்த நபர் மந்தாரக்குப்பம் அடுத்த ஐ.டி.ஐ. நகர் பகுதியைச் சேர்ந்த அருண் என்கிற அருண்குமார் (வயது 35) என்று தெரிந்தது.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், அவரை அதே பகுதியை சேர்ந்த பாண்டியன் மகன் தேவா (25) என்பவர் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

கைது

இந்த நிலையில் அவர் விருத்தாசலம் ரெயில் நிலையம் அருகே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மந்தாரக்குப்பம் போலீசார் விரைந்து சென்று, அங்கு கத்தியுடன் பதுங்கி இருந்த தேவாவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். 
தொடர்ந்து அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தனர். அப்போது தேவா போலீசில் வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

மது அருந்துவோம்

நான், அருண்குமார், ஹரிகிருஷ்ணன் மற்றும் சக நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து மது அருந்துவது வழக்கம். அதன்படி கடந்த 25-ந்தேதி நாங்கள் ஒன்றாக சேர்ந்து மது குடித்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டோம். சிறிது நேரத்தில் ஹரிகிருஷ்ணன் இறந்துவிட்டான் என்ற செய்தி எங்களுக்கு வந்தது. அதன்பிறகு நாங்கள் ஹரிகிருஷ்ணன் வீட்டுக்கு சென்று விசாரித்தோம். ஆனால் அவன் எப்படி இறந்தான் என்று தெரியவில்லை. பின்னர் தீவிரமாக விசாரித்த போது, ஹரிகிஷ்ணன் சாவுக்கு அருண்குமார் தான் காரணம் என்று எங்களுக்கு தெரிய வந்தது. இதனால் அருண்குமாரை கொலை செய்ய திட்டமிட்டு, தொடர்ந்து அவனுடன் மது அருந்தி வந்தோம்.

குத்திக்கொலை

இதற்கிடையில் கடந்த 1-ந்தேதி அருண்குமாரை நெய்வேலி நிலக்கரி சுரங்கம் 2-ல் உள்ள முன்பகுதியில் அதிகப்படியான முட்புதர்கள்,  பள்ளங்கள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச்சென்றேன். அங்கு அவனிடம் ஹரிகிருஷ்ணன் சாவு குறித்து கேட்டேன். ஆனால் அவன் பிடி கொடுக்காமல் முன்னுக்கு பின் முரணாக பேசினான். இதனால் ஆத்திரமடைந்த நான் கையில் வைத்திருந்த கத்தியால் கழுத்து, தலை, கை என சரமாரியாக குத்தியும், வெட்டியும் கொலை செய்து விட்டு தலைமறைவாகி விட்டேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரி வித்தனர். இதையடுத்து கைதான தேவாவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்