மாத்தூர் தொட்டிப்பாலத்தில் இருந்து கீழே குதித்து ஆஸ்பத்திரி ஊழியர் தற்கொலை

104 அடி உயரமுள்ள மாத்தூர் தொட்டிப்பாலத்தில் இருந்து கீழே குதித்து ஆஸ்பத்திரி ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-09-03 21:58 GMT
திருவட்டார்:
104 அடி உயரமுள்ள மாத்தூர் தொட்டிப்பாலத்தில் இருந்து கீழே குதித்து ஆஸ்பத்திரி ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

104 அடி உயர தொட்டிப்பாலம்

குமரி மாவட்டம் மாத்தூர் தொட்டிப்பாலம் புகழ் பெற்றது.  ஆசியாவிலேயே உயரமான தொட்டிப்பாலமாகும். 104 அடி உயரமுள்ள இந்த பாலத்தை பார்வையிட ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று மதியம் இந்த தொட்டிப்பாலத்தின் மேலே ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த நபர் திடீரென பாலத்தில் இருந்து கீழே குதித்தார். இதனை பார்த்த சுற்றுலா பயணி ஒருவர், காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டார். ஆனால் அதற்குள் விபரீத சம்பவம் நடந்து முடிந்து விட்டது.

கீழே குதித்து தற்கொலை

பாறைகள் நிறைந்த பகுதியில் விழுந்ததில் படுகாயமடைந்த அவர் அதே இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்த திருவட்டார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றினர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.
தொட்டிப்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்தவர் குலசேகரம் கான்வென்ட் பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் சந்திரபோஸ் (வயது 38) என்பது தெரிய வந்தது.
மனைவிக்கு குறுந்தகவல் அனுப்பினார்
இவர் சாமியார்மடத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி ஜெல்னா பிரியங்காவும், அதே ஆஸ்பத்திரியில் வேலை பார்த்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று ஜெல்னா பிரியங்காவை மோட்டார் சைக்கிளில் ஜெகதீஷ் சந்திரபோஸ் வேலைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அவர் வேலைக்கு செல்லாமல் அங்கிருந்து கிளம்பினார்.
அப்போது மிகவும் மனமுடைந்த நிலையில் அவர் இருந்ததாக தெரிகிறது. இதனை தொடர்ந்து அவர் மாத்தூர் தொட்டிப்பாலம் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, தொட்டிப்பாலத்தில் நடந்து சென்றுள்ளார். தற்கொலை முடிவை எடுப்பதற்கு முன்பு அவர், மனைவியின் செல்போனுக்கு ஒரு குறுந்தகவல் அனுப்பினார். அதில், தன்னை மன்னிக்கவும் என்று அனுப்பி உள்ளார். பின்னர் தொட்டிப்பாலத்தில் இருந்து கீழே குதித்து ஜெகதீஷ் சந்திரபோஸ் உயிரை மாய்த்துக் கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

காரணம் என்ன?

இதற்கிடையே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஜெல்னா பிரியங்கா, என்ன பிரச்சினை இருந்தாலும் பேசி தீர்த்து இருக்கலாமே? இப்படியொரு முடிவை எடுத்து விட்டீர்களே, என கணவருடைய உடலை பார்த்து கதறி அழுதார்.
பின்னர் ஜெகதீஷ் சந்திரபோஸ் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், நகை கடனை அடைக்க முடியாததால் வங்கியில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த கடனை எப்படி அடைக்கப்போகிறோம் என ஜெகதீஷ் சந்திரபோஸ் மனமுடைந்த நிலையில் இருந்ததாகவும், இதனால் அவர் இந்த தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாத்தூர் தொட்டிப் பாலத்தில் இருந்து கீழே குதித்து ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்