திட்டமிட்டபடி சதுர்த்தியன்று விநாயகர் சிலை வைத்து வழிபாடு-ஊர்வலம் பா.ஜ.க.வினர் பேச்சால் பரபரப்பு

திட்டமிட்டபடி சதுர்த்தியன்று விநாயகர் சிலை வைத்து வழிபாடு-ஊர்வலம் நடைபெறும் என்று பா.ஜ.க.வினர் பேச்சால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-09-04 18:58 GMT
அன்னவாசல்:
இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று விநாயக சதுர்த்தி விழா மற்றும் விநாயகர் சிலை வைப்பது தொடர்பான அரசின் உத்தரவு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்த விளக்க‌ கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட பா.ஜ.க. பொதுச்செயலாளர் சிவசாமி கண்டியர் தலைமையில், அன்னவாசல் வடக்கு ஒன்றிய தலைவர் செல்லத்துரை, அன்னவாசல் தெற்கு ஒன்றிய தலைவர் ரெங்கையா மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கொரோனா நோய் தொற்றை தடுக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவை வீட்டிலேயே கொண்டாட வேண்டும் என அதிகாரிகள் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் கூட்டத்தில் பேசிய பா.ஜ.க.வினர் மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி விநாயகர் வழிபாட்டிற்கு விதிக்கப்பட்ட தடையை ஏற்க முடியாது எனவும், திட்டமிட்டபடி பா.ஜ.க. சார்பில் சிலை வைத்து வழிபாடு செய்து ஊர்வலம் நடத்தப்படும் என தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்