விவசாயி கவனத்தை திசை திருப்பி ரூ.1.40 லட்சம் பறிப்பு

விவசாயி கவனத்தை திசை திருப்பி ரூ.1.40 லட்சத்தை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

Update: 2021-09-04 21:27 GMT
கீழப்பழுவூர்:

நகையை அடகு வைத்து...
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள நதியனூர் கிராமத்தை சேர்ந்தவர் திருஞானம்(வயது 52). விவசாயியான இவர் குடும்ப செலவுக்காக நேற்று திருமானூர் கிராமத்தில் உள்ள ஒரு வங்கியில் நகையை அடகு வைத்து, ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தை பெற்றார். அந்த பணத்தை ஒரு பையில் வைத்து எடுத்துக்கொண்டு, தனது இருசக்கர வாகனத்தில் சொந்த ஊர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
வழியில் ஏலாக்குறிச்சியில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு அங்கிருந்து திருஞானம் புறப்பட்டார். அப்போது பின்னால் வந்த 3 பேர், 120 ரூபாய் அங்கே கிடைக்கிறது, அது உங்களுடையதா? என்று கேட்டு திருஞானத்தின் கவனத்தை திசை திருப்பியுள்ளனர். 
பணம் பறிப்பு
மேலும் அவர் இருசக்கர வாகனத்தில் மாட்டியிருந்த பணம் இருந்த பையை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் நிலைகுலைந்த திருஞானம், அதிர்ச்சியடைந்து செய்வதறியாமல் தவித்தார். பின்னர் இது குறித்து திருமானூர் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் சம்பவ இடத்தை உடனடியாக நேரில் பார்வையிட்ட திருமானூர் போலீசார், பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரித்தனர். இதில் மர்ம நபர்கள், திருஞானத்தை பின்தொடர்ந்து வந்து பணத்தை பறித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடும்பச்செலவுக்காக தங்க நகையை அடகு வைத்து, விவசாயி கொண்டு வந்த பணத்தை பட்டப்பகலில் மர்ம நபர்கள் வழிப்பறி செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்