ஏ.டி.எம்.மையத்தில் அலாரம் ஒலித்ததால் பரபரப்பு

ஏ.டி.எம்.மையத்தில் அலாரம் ஒலித்ததால் பரபரப்பு

Update: 2021-09-05 12:41 GMT
குடியாத்தம்

குடியாத்தம் நடுப்பேட்டை ராஜாஜி தெருவில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை உள்ளது. வங்கியை ஒட்டியபடி ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு பணம் டெபாசிட் செய்யும் எந்திரங்களும், பணம் எடுக்கும் எந்திரங்களும் உள்ளன. இதனால் எப்போதும் வாடிக்கையாளர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள்.

நேற்று மதியம் திடீரென ஏடிஎம் மையத்தில் இருந்து அபாய எச்சரிக்கை அலாரம் ஒலிக்கத்தொடங்கியது. தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஒலித்துக்கொண்டே இருந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன், தனிப்பிரிவு ஏட்டு வினோத் உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று பார்த்தனர். 

பின்னர் உடனடியாக வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சிறிது நேரத்தில்  வங்கி ஊழியர் வந்து பார்த்தபோது, ஏ.டி.எம். மையத்தில் உள்ள அபாய எச்சரிக்கை அலாரத்தின் பட்டனை யாரோ தவறுதலாக அழுத்தியுள்ளதால் எச்சரிக்கை ஒலி ஒலித்ததாக கூறி அந்த பட்டனை ஆப் செய்தார்.  இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்