திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேச நாட்டை சேர்ந்த 4 பேரை திருப்பூர் தெற்கு போலீசார் கைது செய்தனர்.

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேச நாட்டை சேர்ந்த 4 பேரை திருப்பூர் தெற்கு போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-09-05 16:21 GMT
திருப்பூர், 
திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேச நாட்டை சேர்ந்த 4 பேரை திருப்பூர் தெற்கு போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வங்கதேச நாட்டினர் சிக்கினர்
பனியன் தொழில் நகரான திருப்பூரில் வெளிமாநில தொழிலாளர்கள் அதிகம் பேர் தங்கி பணியாற்றி வருகிறார்கள். வடமாநில தொழிலாளர்கள் போர்வையில் வங்கதேசத்தை சேர்ந்தவர்களும் உரிய ஆவணங்கள் இன்றி திருப்பூரில் பதுங்கி இருந்து பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வருவது தொடர்கதையாகி வருகிறது. திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா உத்தரவின் பேரில், உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருக்கும் வங்கதேச நாட்டை சேர்ந்தவர்களை கைது செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதன்தொடர்ச்சியாக நேற்று முன்தினம் இரவு திருப்பூர் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் மற்றும் போலீசார் பூம்புகார் நகர் கிழக்கு பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக நடந்து சென்ற 4 பேரை பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும், வங்கதேச நாட்டின் அடையாள அட்டையை அவர்கள் வைத்திருந்ததும் தெரியவந்தது.
4 பேர் கைது
அவர்கள் வங்கதேசம் கல்சினி பகுதியை சேர்ந்த மெகபூல் சிக்தர் (வயது 35), டாக்காவை சேர்ந்த ஷோகில் அல்கர் (33), ஜேரூரை சேர்ந்த முகமது முன்னாகான் (32), சத்கிரா பகுதியை சேர்ந்த அல் அமீன் (23) என்பதும், உரிய ஆவணங்கள் இல்லாமல் அவர்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக திருப்பூர் வெங்கமேடு, முத்தணம்பாளையம் பகுதியில்  தங்கியிருந்து பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சையா, மேற்கண்ட 4 பேர் மீதும் உரிய ஆவணங்கள் இன்றி திருப்பூரில் தங்கியிருந்த பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் செய்திகள்