முடிக்காணிக்கை செலுத்த கட்டணம் இல்லை

பழனி முருகன் கோவிலில் முடிக்காணிக்கை செலுத்த கட்டணம் இல்லை என்று அரசின் அறிவிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதனால் கோவிலில் மொட்டை போட்ட பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2021-09-06 17:10 GMT
பழனி : 

முடிக்காணிக்கை
அறுபடை வீடுகளில் 3-ம்படை வீடாக பழனி முருகன் கோவில் விளங்குகிறது. இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். இது தவிர வாரவிடுமுறை மற்றும் பிற நாட்களில் தரிசனம் செய்ய கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்படும்.

அவ்வாறு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் நேர்த்திக்கடனாக முடிக்காணிக்கை செலுத்துவது வழக்கம். பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் திருஆவினன்குடி கோவில், சரவணப்பொய்கை, வடக்கு கிரிவீதி, மேற்குகிரிவீதி உள்ளிட்ட 6 இடங்களில் முடிக்காணிக்கை செலுத்தும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

கட்டணம் இல்லை
இங்கு முடிக்காணிக்கை செலுத்த ஒரு நபருக்கு ரூ.30 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இதில் ரூ.25 முடிக்காணிக்கை நிலைய தொழிலாளர்களுக்கும், கோவில் சார்பில் வழங்கப்படும் பிளேடுக்கு ரூ.5-ம் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்தநிலையில் தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் முடிக்காணிக்கை செலுத்த கட்டணம் இல்லை என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி பழனி முருகன் கோவிலுக்கு முடிக்காணிக்கை செலுத்த கட்டணம் இல்லை என்று அறிந்ததும் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனால் பழனி அடிவாரத்தில் உள்ள முடிக்காணிக்கை நிலையங்களில் ெமாட்டை போடுவதற்கு பக்தர்கள் குவிந்தனர். 

இதுகுறித்து மொட்டை போட்ட பக்தர்களிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-
பக்தர்கள் மகிழ்ச்சி
சிவக்குமார் (தாராபுரம்):- அரசின் இந்த நடைமுறை மிகவும் வரவேற்கத்தக்கது. குறிப்பாக ஏழை, எளிய பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகும். ஏனெனில் ஒரு குடும்பத்தில் 5-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து முடிக்காணிக்கை செலுத்த அதிக செலவாகும். இந்த அறிவிப்பால் இனி கோவிலுக்கு செல்ல வேண்டும் என்றால் அதற்கான போக்குவரத்து செலவு மட்டுமே போதும். மற்றபடி தரிசனம், முடிக்காணிக்கைக்கு செலவு செய்ய வேண்டியதில்லை. இதனை வரவேற்கிறோம்.  

சூர்யா (சேலம்) :- தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில் முடிக்காணிக்கை சீட்டில் அதற்கான தொகை அச்சிடப்பட்டிருந்தாலும், அதை விட அதிகமாக பணம் வாங்கி வந்தனர். தற்போது கட்டணமில்லை என்ற அறிவிப்பால் கட்டண வசூல் குளறுபடிக்கு தீர்வு கிடைத்துள்ளது. கோவிலுக்கு வந்த இடத்தில் நிம்மதியாக தரிசனம் செய்துவிட்டு செல்ல முடியும். இந்த அறிவிப்பு பக்தர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.


பரிமளா (தர்மபுரி) :- கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு ஏழை-நடுத்தர பக்தர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. ஏனெனில் பழனியை பொறுத்தவரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்துகின்றனர். இதனால் கோவிலில் தரிசனத்துக்கு வந்து செல்ல ஆகும் செலவுத்தொகையில் ஒரு கணிசமான தொகை குறையும்.

மேலும் செய்திகள்