புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் ஒரு பள்ளி மாணவருக்கு கொரோனா தொற்று

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் ஒரு பள்ளி மாணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

Update: 2021-09-08 18:16 GMT
கீரமங்கலம்:
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்ட பின் கடந்த 1-ந் தேதி முதல் 9 முதல் பிளஸ்-2 வகுப்புகள் வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவ-மாணவிகள் வருகை தருகின்றனர். இந்த நிலையில் கறம்பக்குடி அருகே முள்ளுக்குறிச்சியில் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதேபோல ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பிளஸ்-1 மாணவி ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று ஆலங்குடி அருகே குளமங்கலத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அந்த மாணவருக்கு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாணவருடன் படிக்கும் சக மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டன. மேலும் அந்த வகுப்பறை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டன. மேலும் சுகாதார நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் என சுமார் 80 பேருக்கு மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாணவன் படித்த 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேற்று விடுமுறை விடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதனால் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்