தேனி மாவட்டத்தில் தடையை மீறி வைக்க முயன்ற 8 விநாயகர் சிலைகள் பறிமுதல்

தேனி மாவட்டத்தில் பொது இடங்களில் தடையை மீறி வைக்க முயன்ற 8 விநாயகர் சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-09-09 14:05 GMT
தேனி:
விநாயகர் சதுர்த்தி விழா இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவின் போது பொது இடங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் இந்து அமைப்புகள் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். வழிபாடு நடத்திய பின்னர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பார்கள். ஆனால், கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தவும், ஊர்வலம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டது.
அதுபோல், இந்த ஆண்டும் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபாடு நடத்தவும், சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. தனிநபர்கள் தங்களின் வீடுகளில் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தி, சமூக இடைவெளியுடன் நீர்நிலைகளில் சிலைகளை கரைக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த தடையை விலக்க வேண்டும் என்று இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
சிலைகள் பறிமுதல்
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவதற்காக தேனி மாவட்டத்தில் சில பகுதிகளில் பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபாடு நடத்த சிலர் முயற்சி செய்தனர். இவ்வாறு தடையை மீறி சிலைகள் வைக்க முயன்றதை போலீசார் தடுத்து நிறுத்தி, சிலைகளை பறிமுதல் செய்தனர். மாவட்டத்தில் மொத்தம் 8 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில் பெரியகுளம், கெங்குவார்பட்டி, சில்வார்பட்டி பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் தடையை மீறி வைக்க முயன்ற தலா ஒரு விநாயகர் சிலை, வடபுதுப்பட்டி பகுதியில் வைக்க முயன்ற 2 சிலைகள் என 5 சிலைகளை பறிமுதல் செய்து அவற்றை பெரியகுளம் பாலசுப்பிரமணியசாமி கோவில் வளாகத்துக்கு கொண்டு வந்து பாதுகாப்பாக வைத்தனர். அதுபோல், தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் இந்து எழுச்சி முன்னணி சார்பில் தடையை மீறி வைக்க முயன்ற விநாயகர் சிலையை அல்லிநகரம் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பாதுகாப்பு
கடமலைக்குண்டு பஸ் நிலையம் அருகில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போது, அந்த வழியாக ஒரு சரக்கு வேனில் 3 விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டன. அவை கோவில்பாறை, பச்சையப்பாநகர், பொன்நகர் ஆகிய இடங்களில் பொதுமக்கள் சார்பில் வைத்து வழிபட கொண்டு செல்லப்பட்டதாக தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து கடமலைக்குண்டு பத்ரகாளியம்மன் கோவில் வளாகத்தில் வைத்தனர். தகவல் அறிந்ததும் பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகிகள் கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்துக்கு வந்து சிலைகளை ஒப்படைக்குமாறு கோரிக்கை வைத்தனர். அப்போது 3 அடி உயரம் கொண்ட சிறிய சிலையை மட்டும் பொதுமக்களில் ஒருவர் தனது வீட்டில் வைத்து வழிபட அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தார். அதை ஏற்றுக் கொண்டு சிறிய சிலையை மட்டும் அவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
மாவட்டம் முழுவதும் சதுர்த்தி விழாவையொட்டி 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே வீடுகளில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தேவையான பொருட்களை வாங்குவதற்கு கடைவீதிகளில் நேற்று பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள் சிறிய வடிவிலான விநாயகர் சிலைகள், பூஜைப் பொருட்கள், பூக்கள் போன்றவற்றை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

மேலும் செய்திகள்