தென்மேற்கு பருவமழை சராசரியை விட குறைந்தது

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை சராசரியை விட குறைவாக பெய்து வருகிறது.

Update: 2021-09-09 16:56 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை சராசரியை விட குறைவாக பெய்து வருகிறது.

தென்மேற்கு பருவமழை

நீலகிரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் தென்மேற்கு பருவமழை பெய்வது வழக்கம். இந்த ஆண்டில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இருப்பினும் பெய்ய வேண்டிய சராசரி மழை அளவை விட குறைந்த அளவே மழை பதிவாகி வருகிறது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

நீலகிரியில் தென்மேற்கு பருவமழை 4 மாதங்களில் சராசரியாக 938.40 மில்லி மீட்டர் பெய்ய வேண்டும். கடந்த ஆண்டு 1,296.81 மில்லி மீட்டர் மழை பதிவானது. இது சராசரியை விட அதிகம் ஆகும்.

முன்னெச்சரிக்கை

ஆனால் இந்த ஆண்டில் கடந்த ஜூன் மாதம் 206.53 மில்லி மீட்டர் மழை, ஜூலை மாதம் 125.23 மில்லி மீட்டர் மழை, கடந்த ஆகஸ்டு மாதம் 202.68 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதன் சராசரி 534.44 மில்லி மீட்டர் ஆகும்.

இது 76 சதவீதம். இந்த மாதம் அதிகமாக மழை பெய்தால் மட்டுமே சராசரி மழை அளவை எட்டும். தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருவதால் பாதிப்பு இல்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

நீர்மட்டம் உயர்வு

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஊட்டியில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருவதால் கடுங்குளிர் நிலவுகிறது. சீதோஷ்ண காலநிலையில் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகின்றனர். 

இதற்கிடையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

மேலும் செய்திகள்