திருவண்ணாமலையில் பூஜை பொருட்கள் வாங்க கடை வீதிகளில் திரண்ட பொதுமக்கள்

விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்பட உள்ளதால் பூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் கடைவீதிகளில் திரண்டனர்.

Update: 2021-09-09 17:27 GMT
திருவண்ணாமலை

விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்பட உள்ளதால் பூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் கடைவீதிகளில் திரண்டனர்.

விநாயகர் சதுர்த்தி விழா

இந்துக்களின் முக்கிய விழாக்களில் விநாயகர் சதுர்த்தி விழாவும் ஒன்றாகும். விநாயகர் சதுர்த்தி விழா இன்று (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்தாண்டு தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதனால் பொதுமக்கள் வீடுகளில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்காக திருவண்ணாமலையில் அவல், பொரி, பழ வகைகள், சோளம், பூக்கள், பூஜை பொருட்கள் போன்றவற்றை வாங்குவதற்காக திருவூடல் தெரு, தேரடி வீதி உள்ளிட்ட முக்கிய கடைவீதிகளில் திரண்டனர். ஆனால் கடந்த ஆண்டை காட்டிலும் மக்கள் கூட்டம் மிகக்குறைவாகவே காணப்பட்டது. 

கடை வீதிகளுக்கு வந்த பொதுமக்கள் முககவசங்கள் அணிந்து பொருட்களை வாங்கிச் சென்றனர். ஆனால் சமூக இடைவெளியை முற்றிலும் கடைபிடிக்கவில்லை.

போலீசார் பாதுகாப்பு

நகரின் பல்வேறு பகுதிகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் பல்வேறு வண்ணங்களில், பல்வேறு வடிவங்களில் விற்பனை செய்யப்பட்டன. இதனை பொதுமக்கள் மிகவும் ஆர்வமாக பார்வையிட்டு வாங்கி சென்றனர். மேலும் விநாயகர் சிலைகளை அலங்காரிப்பதற்காக சிறிய வண்ண அலங்கார குடைகளும் விற்பனை செய்யப்பட்டது. அதையும் மக்கள் வாங்கி சென்றனர். 

பொதுஇடங்களில் சிலை வைத்து வழிபட தடை உள்ளதால் மாவட்டம் முழுவதும் மாவட்ட சூப்பிரண்டு பவன்குமார்ரெட்டி உத்தரவின் பேரில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

வந்தவாசி

ஆண்டுதோறும் வந்தவாசியில் சிறு விநாயகர் முதல் 5 அடி உயரமுள்ள விநாயகர் சிலை வரை, பலவித வண்ணங்களில் கலைநயம் மிக்க வேலைப்பாடுகளோடு விற்பனை செய்யப்படும். கொரோனா நோய் தொற்று காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறிய விநாயகர் சிலைகளின் வியாபாரம் கூட மந்தமாக இருப்பதாக சிறு வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் செய்திகள்