கீரனூரில் மின்சாரம் பாய்ந்து சமையல் தொழிலாளி பலி திருமண மண்டபத்தில் சோகம்

கீரனூரில் நடைபெற்ற திருமண விழாவில் மின்சாரம் பாய்ந்து சமையல் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-09-09 18:58 GMT
கீரனூர்:
திருமண நிகழ்ச்சி
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சமையல் வேலை செய்வதற்கு 15 பேர் கொண்ட குழு தடபுடலாக சமையல் வேலையை செய்து வந்தனர்.  
அதில் கீரனூரை அடுத்துள்ள சிதம்பரம்பட்டியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் தர்மராஜ் (வயது 24) என்பவரும் சமையல் செய்யும் பகுதியில் உள்ள அடுப்பில் சாம்பாரை தயார் செய்து கொண்டிருந்தார். அருகில் இரும்புக் கம்பி தடுப்பு பகுதியில் காற்றை வெளியேற்றும் மின்விசிறி ஓடிக்கொண்டிருந்துள்ளது. 
தொழிலாளி பலி 
அப்போது சமையல் செய்த தர்மராஜ் ஒரு கையில் சாம்பாரை கரண்டியால் கலக்கிக் கொண்டும், மற்றொரு கையை இரும்பு தடுப்பு உள்ள ஜன்னல் பகுதியில் வைத்த போது மின்விசிறியில் இருந்து மின்சாரம் அவர் மீது பாய்ந்தது. இதில் மயங்கி விழுந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கீரனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். 
இதையடுத்து கீரனூர் போலீசார் தர்மராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்