4 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த விவசாயிக்கு ஆயுள் தண்டனை புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

4 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

Update: 2021-09-09 19:21 GMT
புதுக்கோட்டை:
 4 வயது குழந்தை
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியை சேர்ந்தவர் சின்னதுரை என்ற வினோத் சக்கரவர்த்தி (வயது 42). விவசாயி. இவர் கடந்த 2003-ம் ஆண்டு அப்பகுதியை சேர்ந்த 4 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், மணமேல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சின்னத்துரையை வலைவீசி தேடி வந்தனர். 
இதையடுத்து 2005-ம் ஆண்டு பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயார் சென்னை ஐகோர்ட்டில் மனு கொடுத்தார். அதன்பேரில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இதில் 17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சின்னதுரை அறிவிக்கப்பட்ட குற்றவாளி என்றும், அவர் சொத்துக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. 
விவசாயி கைது 
இந்த நிலையில், சின்னதுரை முஸ்லிமாக மதம் மாறி திருமணம் செய்து கொண்டு கர்நாடக மாநிலத்தில் மறைந்திருப்பதாக சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் போலீசார் கர்நாடக மாநிலத்திற்கு சென்று சின்னதுரையை கைது செய்தனர். பின்னர் அவர் மீது புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
ஆயுள் தண்டனை
இந்த வழக்கு விசாரணை 8 மாதத்தில் முடிக்கப்பட்ட நிலையில், அதன் தீர்ப்பை நீதிபதி டாக்டர் சத்யா நேற்று கூறினார். அதில், 4 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக சின்னதுரைக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் வழங்கி பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட குழந்தை மற்றும் அவர் குடும்பத்தினர் மன உளைச்சலில் உள்ளதால், பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ரூ.4 லட்சம் நஷ்ட ஈடு அரசு வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்தார். குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த விவசாயி 17 ஆண்டுகள் கழித்து கைது செய்யப்பட்டு, அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்