தேசிய அளவில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு 73-வது இடம் துணைவேந்தர் ஜெகநாதன் தகவல்

இந்தியாவில் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு 73-வது இடம் கிடைத்துள்ளது என்று பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் தெரிவித்தார்.

Update: 2021-09-09 21:58 GMT
கருப்பூர்
பெரியார் பல்கலைக்கழகம்
மத்திய அரசின் கல்வி அமைச்சக தேசிய தரவரிசை பட்டியலில், நாட்டின் மிகச்சிறந்த தரமான பல்கலைக்கழகங்களில் சேலம் கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக்கழகம் 73-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழகம் நாட்டின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களில் ஒன்றாக தனது இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளது என பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.ஜெகநாதன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:- தேசிய அளவிலான உயர்கல்வி நிறுவனங்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடனான கூட்டு ஆய்வுகள், பட்டதாரிகள் உருவாக்கம், விரிவாக்கப் பணிகள் மற்றும் மக்கள் அபிப்பிராயம் போன்ற அளவீடுகளை கொண்டு மத்திய அரசின் கல்வி அமைச்சகம் உயர்கல்வி நிறுவனங்களின் தரத்தை ஆராய்ந்து என்.ஐ.ஆர்.எப். எனப்படும் தேசிய தரவரிசை பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. 
73-வது இடம்
அதன்படி வெளியிடப்பட்ட 2021-ம் ஆண்டிற்கான தேசிய தரவரிசைப்பட்டியலில் நாட்டில் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களில் பெரியார் பல்கலைக்கழகம் 73-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. கடந்த ஆண்டு தரவரிசைப்பட்டியலில் 83-வது இடத்தில் இருந்த பெரியார் பல்கலைக்கழகம் இப்போது 10 இடங்கள் முன்னேறி 73-வது இடத்தை எட்டியுள்ளது. 
ஆராய்ச்சி, கற்றல்-கற்பித்தல் மற்றும் விரிவாக்க பணிகளில் பெரியார் பல்கலைக்கழகம் கடந்த ஆண்டை விட கூடுதல் புள்ளிகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையொட்டி பல்கலைக்கழக என்.ஐ.ஆர்.எப். குழுவினரை பாராட்டுகள் தெரிவித்து கொள்கிறேன். மேலும் அடுத்தடுத்த நிலையில் கடுமையாக உழைத்து பல்கலைக்கழகத்தின் தரத்தை உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்