விநாயகர் சதுர்த்தி விழா: சேலத்தில் பூஜை பொருட்கள் வாங்க மக்கள் ஆர்வம்

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சேலம் கடைவீதியில் நேற்று பூஜை பொருட்களை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

Update: 2021-09-09 22:26 GMT
சேலம்
பூஜை பொருட்கள்
விநாயகர் சதுர்த்தி விழா இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சேலம் மாநகரில் நேற்று பூஜை பொருட்கள் வாங்க கடைவீதியில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தேர்வீதி, முதல் அக்ரஹாரம், சின்னக்கடைவீதி, பால் மார்க்கெட், செவ்வாய்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சதுர்த்தி விழாவுக்கு பூஜை பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்தது.
வீடுகளில் வைத்து வழிபடும் விநாயகருக்கு படையல் இடுவதற்காக வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, திராட்சை உள்ளிட்ட பழ வகைகளும், பொரி, கடலை, சுண்டல் உள்ளிட்டவற்றையும் பொதுமக்கள் கடைகளில் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். 
விநாயகர் சிலைகள்
விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்கு பயன்படும் வகையில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் விற்பனையும் தீவிரமாக நடந்தது. வின்சென்ட், குமாரசாமிப்பட்டி, முதல் அக்ரஹாரம், குரங்குச்சாவடி, சூரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனைக்காக விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன. சிலையின் அளவை பொருத்து ரூ.30, ரூ.50, ரூ.100 முதல் ரூ.500 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. 
வீட்டில் வைத்து வழிபட சிறிய அளவிலான விநாயகர் சிலைகளுடன் அலங்கார வண்ண குடைகளையும் சிலர் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். மேலும், அருகம்புல் மற்றும் எருக்கம்பூ மாலைகள் விற்பனையும் நடந்தது. இதனை பெண்கள் ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர். அதேபோல், சேலத்தின் பல்வேறு இடங்களில் வாழைக்கன்றுகளும் விற்பனை செய்யப்பட்டது. பூஜை பொருட்கள் வாங்குவதற்காக சேலம் கடை வீதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ராஜகணபதி கோவில் 
சேலத்தில் பிரசித்தி பெற்ற ராஜகணபதி கோவிலில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்படும். ஆனால் இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் கோவிலுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. 
எனவே, கோவில் நிர்வாகம் சார்பில் தொடங்கப்பட்டுள்ள இணையதளத்தில் ராஜகணபதிக்கு செய்யப்படும் அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகளை பக்தர்கள் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிர கண்காணிப்பு
சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அந்தந்த பகுதிகளில் உள்ள போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்