மராட்டா வலம்புரி விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மராட்டா- வலம்புரி விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தஞ்சை பெரியகோவிலில் பிள்ளையாருக்கு 25 கிலோ சந்தனம் பூசப்பட்டது.

Update: 2021-09-10 20:02 GMT
தஞ்சாவூர்:
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மராட்டா- வலம்புரி விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தஞ்சை பெரியகோவிலில் பிள்ளையாருக்கு 25 கிலோ சந்தனம் பூசப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி விழா
உலக புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவில், மன்னர் ராஜராஜசோழனால் 1010-ம் ஆண்டு கட்டப்பட்டது. உலக பாரம்பரிய சின்னமாக விளங்கும் இந்த கோவில் இந்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.பின்னர் 13-ம் நூற்றாண்டில் பாண்டியர்களால் அம்மன் சன்னதியும், விஜயநகர அரசர்களால் சுப்பிரமணியர் சன்னதியும் உருவாக்கப்பட்டது. தொடர்ந்து மராட்டியர் ஆட்சியில், இரண்டாம் சரபோஜி மன்னரால், 5 அடி உயரத்தில் பிரமாண்ட தோற்றத்தில், விநாயகர் சன்னதி அமைக்கப்பட்டது. இது மராட்டா விநாயகர் என்று அழைக்கப்படுகிறது.
சந்தனக்காப்பு அலங்காரம்
அவருடைய ஆட்சிக்காலத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியன்று, விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்து வழிபாடு நடைபெற்று வருகிறது. பின்னர் அவருடைய காலத்திற்கு பிறகு சிறப்பு வழிபாடுகள் மட்டுமே நடந்தது. சந்தனக்காப்பு அலங்காரம் எதுவும் நடைபெறவில்லை.கடந்த 2018-ம் ஆண்டு முதல், விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 25 கிலோ சந்தனத்தை கொண்டு விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
பக்தர்கள் இன்றி
மேலும், விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, அவல், பொரி போன்றவை வைத்து படைக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் பண்டிகை காலங்களில் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. கோவில்கள் மூடப்பட்டதால் கோவிலின் வாயிலில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வலம்புரி விநாயகர்
தஞ்சை கவாஸ்கார தெருவில் உள்ள அழகிக்குளக்கரையில் வலம்புரி விநாயகர் கோவில் உள்ளது.இந்த கோவிலை மாமன்னன் ராஜராஜசோழன், பெரியகோவில் கட்டுவதற்கு முன்பு கட்டியதாக கூறப்படுகிறது. இந்த கோவிலிலும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று வலம்புரி விநாயகருக்கும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதையொட்டி விநாயகருக்கு கொழுக்கட்டை செய்து படைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்