தீக்குளித்த மாட்டுவண்டி தொழிலாளி சாவு

தீக்குளித்த மாட்டுவண்டி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-09-10 20:15 GMT
தா.பழூர்:

தீக்குளித்தார்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள உதயநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர்(வயது 40). மாட்டுவண்டி தொழிலாளி. நீண்ட நாட்களாக மாட்டுவண்டி மணல் குவாரி அமைக்க இப்பகுதி மாட்டு வண்டி தொழிலாளர்கள் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வந்தனர். அவர்களது பிழைப்புக்கு வேறு வழி இல்லாததால் அரசு அனுமதியின்றி அவ்வப்போது மாட்டு வண்டியில் மணல் எடுத்து வந்து விற்று தங்களது வாழ்க்கையை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் சட்டவிரோதமாக மணல் எடுத்த வழக்கில் பாஸ்கரின் மாட்டு வண்டி தா.பழூர் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டதால், அவர் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து திடீரென கடந்த 1-ந் தேதி அவரது வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளித்தார். அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து, அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக பாஸ்கர் அனுப்பி வைக்கப்பட்டார்.
சாவு
அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு ஆதரவாக பாஸ்கர் உருக்கமாக பேசிய ஒரு ஆடியோ வெளியாகி, மாட்டு வண்டி தொழிலாளர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நேற்று மாலை அங்கு சிகிச்சை பலனின்றி பாஸ்கர் பரிதாபமாக உயிரிழந்தார். பாஸ்கருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். தீக்குளித்த பாஸ்கர் இறந்தது அனைத்து மாட்டுவண்டி தொழிலாளர்கள் இடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்