மங்கலம்பேட்டையில் தடையை மீறி விநாயகர் சிலையை பிரதிஷ்டை

மங்கலம்பேட்டையில் தடையை மீறி விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்தனர். பின்னர் சிலையை இந்து முன்னணியினர் ஊர்வலமாக எடுத்து சென்ற போது போலீசார் அவர்களை தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Update: 2021-09-10 20:24 GMT
விருத்தாசலம், 

விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை பேரூராட்சியில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். 
இங்கு மங்கலம்பேட்டை மற்றும் சுற்றிலும் உள்ள கிராமப்புற பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் வாகனங்களில் ஏற்றி வைத்து, வீதிகள் தோறும் ஊர்வலமாக எடுத்து செல்லப்படும். 

ஆனால் தற்போது கொரோனா பெருந்தொற்று காலம் என்பதால், பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையில் சதுர்த்தி விழாவுக்கு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதில் பொது இடங்களில் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடவும், ஊர்வலத்துக்கும் த டை விதிக்கப்பட்டு இருந்தது.

5 அடி உயர சிலை

இருப்பினும், நேற்று இந்து முன்னணி மற்றும் ஆன்மீக அமைப்புகள் சார்பில் மங்கலம்பேட்டை சிவன் கோவில் வீதியில் உள்ள இந்து முன்னணி நிர்வாகி ஒருவரின் இடத்தில் 5 அடி உயரம் உள்ள விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்தனர். பின்னர் மதியம் அங்குள்ள ஏரியில் சிலையை கரைக்க சிறப்பு பூஜைகள் செய்து, மோட்டார் சைக்கிளில் ஏற்றி ஊர்வலமாக கொண்டு சென்றனர். 

தடையை மீறி சிலையை பிரதிஷ்டை செய்து, ஊர்வலமாக எடுத்து செல்லப்படுவது பற்றி அறிந்த மங்கலம்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று விநாயகர் சிலையை கரைக்க 5 பேர் மட்டுமே செல்ல வேண்டும் என்று கூறினார்கள்.

தள்ளுமுள்ளு

ஆனால் அதை பொருட்படுத்தாத இந்து முன்னணியினர் அங்கிருந்து ஊர்வலமாக விநாயகர் சிலையை கொண்டு சென்றனர். அப்போது மங்கலம்பேட்டையில் உள்ள ஓட்டை பிள்ளையார் என்ற வரசித்தி விநாயகர் கோவிலில் சூடம் ஏற்றி தேங்காய் உடைப்பதற்காக சென்றனர். 
அங்கு அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் இந்து முன்னணியினருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதமும் தள்ளு முள்ளும் ஏற்பட்டது. 

தொடர்ந்து இந்து முன்னணியினர் தேங்காய் உடைத்து சூடம் ஏற்றி வழிபட்ட பின்பு விநாயகர் சிலையை ஊர்வலமாக கொண்டு சென்று ஏரியில் கரைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்