சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில் மீண்டும் உடன்பாடு ஏற்படவில்லை.

பனியன் நிறுவன தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில் மீண்டும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் 7-வது கட்ட பேச்சுவார்த்தை வருகிற 17-ந் தேதி நடந்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-09-10 22:05 GMT
திருப்பூர்
பனியன் நிறுவன தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில் மீண்டும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் 7-வது கட்ட பேச்சுவார்த்தை வருகிற 17-ந் தேதி நடந்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 
சம்பள உயர்வு ஒப்பந்தம் 
திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் வேலை செய்து வரும் தொழிலாளர்களுக்கு வாரந்தோறும் சனிக்கிழமை சம்பளம் வழங்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை தொழிலாளர்களுக்கு விடுமுறை தினமாகும். இந்நிலையில் இந்த சம்பள தொகை பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் தொழிற்சங்கத்தினர் ஒப்பந்தப்படி பனியன் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. 
இந்நிலையில் கொரோனா பாதிப்பின் காரணமாக சம்பள உயர்வு ஒப்பந்தம் போடப்படாமல் இருந்து வந்தது. இதன் பின்னர் தற்போது நடந்து வந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே 6-வது கட்ட சம்பள உயர்வு பேச்சுவார்த்தை நேற்று சைமா சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. 
வருகிற 17-ந் தேதி... 
இதற்கு பேச்சுவார்த்தை குழு தலைவர் பிரேம் துரைசாமி தலைமை தாங்கினார். இதில் பனியன் உற்பத்தியாளர்கள் சங்கங்களான ஏற்றுமதியாளர்கள் சங்கம், சைமா சங்கம், நிட்மா, சிம்கா சங்கம், டீமா, டெக்மா உள்ளிட்ட சங்க நிர்வாகிகளும், தொழிற்சங்கங்களான ஏ.ஐ.டி.யு.சி, சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி, எச்.எம்.எஸ், பி.எம்.எஸ், எல்.பி.எப்., எம்.எல்.எப்., ஏ.டி.பி. ஆகிய 8 தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தொழிற்சங்கத்தினர் சார்பில் 90 சதவீத சம்பள உயர்வு கேட்கப்பட்டது. 
கடந்த பேச்சுவார்த்தையின் போது 28 சதவீதம் வரை சம்பள உயர்வு வழங்க பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம் சம்மதம் தெரிவித்தனர். இதற்கு தொழிற்சங்கத்தினர் ஒத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில் நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் மேலும் கூடுதலாக சம்பள உயர்வு தொழிற்சங்கத்தினர் கேட்டனர். ஆனால் 28 சதவீத சம்பள உயர்வு தான் தற்போதைய சூழ்நிலையில் தர முடியும் என பனியன் நிறுவன உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதன் காரணமாக 7-வது கட்ட பேச்சுவார்த்தை வருகிற 17-ந் தேதி சைமா சங்க அலுவலகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்