திருப்பூர் மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 815 வழக்குகளுக்கு ரூ.36¾ கோடிக்கு சமரச தீர்வு காணப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 815 வழக்குகளுக்கு ரூ.36¾ கோடிக்கு சமரச தீர்வு காணப்பட்டது.

Update: 2021-09-11 16:05 GMT
திருப்பூர், 
திருப்பூர் மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 815 வழக்குகளுக்கு ரூ.36¾ கோடிக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
தேசிய மக்கள் நீதிமன்றம்
திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள கோர்ட்டுகளில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 4 அமர்வுகளில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான ஸ்வர்ணம் நடராஜன் தலைமை தாங்கினார்.
திருப்பூர் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதியும், குடும்ப நல நீதிபதியுமான சுகந்தி, மோட்டார் வாகன இழப்பீடு நீதிமன்ற நீதிபதி நாகராஜன், தலைமை குற்றவியல் நீதிபதி புகழேந்தி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பிரஷ்ணவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி பத்மநாபன், எலும்பு முறிவு டாக்டர் விஜய் கிருஷ்ணன், முதன்மை சார்பு நீதிபதி சந்திரசேகரன், குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் கார்த்திகேயன், உதயசூரியா மற்றும் வக்கீல்கள் கலந்துகொண்டனர்.
போலீஸ்காரர் குடும்பத்தினருக்கு இழப்பீடு
இதில் மோட்டார்சைக்கிள் விபத்தில் படுகாயம் அடைந்த கோவை மாவட்டம் சூலூர் காடாம்பாடியை சேர்ந்த கல்லூரி மாணவர் அரவிந்துக்கு (21) ரூ.47 லட்சம் இழப்பீடு தொகையை இன்சூரன்சு நிறுவனம் வழங்க சமரச
தீர்வு எட்டப்பட்டது.
இதுபோல் சென்னை ஆயுதப்படை போலீஸ்காரரான கொமரலிங்கத்தை சேர்ந்த கார்த்திக் (34) கார் மோதி பலியானார். இதைத்தொடர்ந்து அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு ரூ.60 லட்சம் இழப்பீடு தொகையை இன்சூரன்சு நிறுவனத்தினர் வழங்க சமரச தீர்வு எட்டப்பட்டது. இதற்கான காசோலை மற்றும் உத்தரவுகளை முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் வழங்கினார். இந்த இரு வழக்கிலும் பாதிக்கப்பட்டவர் தரப்பில் வக்கீல் பாலகுமார் ஆஜரானார்.
ரூ.36¾ கோடிக்கு சமரச தீர்வு
இதுபோல் அவினாசி, பல்லடம், காங்கேயம், தாராபுரம், உடுமலை கோர்ட்டுகள் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 15 அமர்வுகளாக தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மொத்தம் 1,403 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 
இதில் 543 மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு ரூ.29 கோடியே 89 லட்சத்து 12 ஆயிரத்துக்கும், 206 சிவில் வழக்குகளுக்கு ரூ.6 கோடியே 49 லட்சத்து 63 ஆயிரத்துக்கும், 19 காசோலை மோசடி வழக்குகளுக்கு ரூ.24 லட்சத்து 27 ஆயிரத்துக்கும், குடும்ப நல வழக்குகள், வங்கி ரொக்கக்கடன் வழக்குகள், சமரசத்துக்குரிய குற்ற வழக்குகள் உள்பட 815 வழக்குகளுக்கு ரூ.36 கோடியே 78 லட்சத்து 82 ஆயிரம் மதிப்பில் சமரச தீர்வு காணப்பட்டது.

மேலும் செய்திகள்