வேலூர் மாநகராட்சி பகுதியில் வீடுகளில் குப்பைகளை உரமாக்கும் திட்டம்

வேலூர் மாநகராட்சி பகுதியில் வீடுகளில் மக்கும் குப்பைகளை உரமாக்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2021-09-11 16:46 GMT
வேலூர்

வேலூர் மாநகராட்சி பகுதியில் வீடுகளில் மக்கும் குப்பைகளை உரமாக்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

குப்பைகளை உரமாக்கும் திட்டம்

வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளில் தினமும் சுமார் 200 டன் குப்பைகள் சேகரமாகிறது. இந்த குப்பைகள் மக்கும், மக்காத குப்பைகளாக திடக்கழிவு மேலாண்மை மையங்களில் பிரிக்கப்படுகிறது. மக்கும் குப்பைகள் உரமாகவும், மக்காத குப்பைகளான பிளாஸ்டிக் பொருட்கள் சிமெண்டு தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 

தற்போது வேலூர் மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மீதமாகும் காய்கறி கழிவுகள் உள்ளிட்ட மக்கும் குப்பைகளை நவீன கருவி மூலம் உரமாக்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் 2-வது மண்டல சுகாதார அலுவலகத்தில் நடந்தது. உதவி கமிஷனர் மதிவாணன் தலைமை தாங்கினார். சுகாதார அலுவலர் சிவக்குமார், சுகாதார அலுவலர்கள் ஈஸ்வரன், ரவி மற்றும் பலர் முன்னிலை வகித்தனர். இதில், சுகாதார மேற்பார்வையாளர்களுக்கு நவீன கருவி குறித்தும், அதை பயன்படுத்தும் முறைகள் பற்றியும் விளக்கி கூறப்பட்டது.

45 நாட்களில்

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பிளாஸ்டிக் பைப்புகளால் வடிவமைக்கப்பட்ட நவீன கருவியில் வீடுகளில் பயன்படுத்தப்படும் காய்கறி, பழங்கள், உணவுகளில் மீதமாவதை கொட்டி நிரப்பினால் சுமார் 45 நாட்களில் அவை உரமாகி விடும். அவற்றை செடி, கொடிகள் மற்றும் வீட்டு தோட்டங்களுக்கு உரமாக பயன்படுத்தலாம்.

5 பேர் வசிக்கும் குடும்பத்தில் ஒருநாளில் சராசரியாக மக்கும் குப்பைகளான காய்கறிகள் 300 கிராம் இந்த கருவியில் கொட்டி வைக்கலாம். இதன்மூலம் பல டன் குப்பைகள் மாநகராட்சிக்கு வருவது குறையும். இந்த கருவியை பயன்படுத்தும் முறை மற்றும் அவற்றின் விலை குறித்து சுகாதார மேற்பார்வையாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்