குமாரபாளையம் அருகே கார் கவிழ்ந்து மருத்துவக்கல்லூரி மாணவர் பலி-நண்பர்கள் 6 பேர் படுகாயம்

குமாரபாளையம் அருகே கார் கவிழ்ந்து கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவர் பலியானார். மேலும் அவருடைய நண்பர்கள் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2021-09-11 18:03 GMT
குமாரபாளையம்:
மருத்துவக்கல்லூரி மாணவர்கள்
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள எட்டிகுட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் விஜய். இவருடைய மகன் நவநீதன் (வயது 21). இவர் நாமக்கல் அரசு கால்நடை மருத்துவக்கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தார். நவநீதன் தன்னுடன் படிக்கும் நண்பர்களுடன் விடுமுறையை கொண்டாட ஊட்டிக்கு சுற்றுலா செல்ல முடிவெடுத்தார். 
அதன்படி நந்தகுமார் என்ற மாணவனின் காரில் நேற்று காலை நாமக்கல் அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி விடுதியில் இருந்து நண்பர்கள் 6 பேர் சேலம் மாவட்டம் சங்ககிரிக்கு வந்தனர். அங்கு அவர்கள் நவநீதனை காரில் ஏற்றிக் கொண்டு ஊட்டிக்கு புறப்பட்டனர்.
வழியில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையத்தில் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையில் தாறுமாறாக ஓடிய கார் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
பரிதாப சாவு
இதனால் இடிபாடுகளுக்குள் சிக்கி காரில் இருந்த கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவர்களான நவநீதன், நந்தகுமார், தர்மபுரியை சேர்ந்த சபரி சந்துரு, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த லட்சுமணன், கோவர்த்தனன், சேலத்தை சேர்ந்த போகன், சங்கர் ஆகிய 7 பேரும் படுகாயம் அடைந்தனர். வலியால் துடித்த அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே நவநீதன் பரிதாபமாக இறந்தார். மற்ற 6 பேரும் அங்கு சிகிச்சை பெற்று பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விசாரணை
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த குமாரபாளையம் போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று நவநீதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமாரபாளையம் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் மருத்துவக்கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்