விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைப்பு

கும்பகோணம் பகுதிகளில் விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைக்கப்பட்டன.

Update: 2021-09-11 19:46 GMT
கும்பகோணம்:
கும்பகோணம் பகுதிகளில் விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைக்கப்பட்டன. 
வீடுகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி விழாவில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்த அனுமதி அளிக்கவில்லை. ஆனால் அவரவர் தங்களது இல்லங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்த அறிவுறுத்தியது. 
இந்தநிலையில் கும்பகோணம் பகுதியில் இந்து மக்கள் கட்சி, சிவசேனா, அகில பாரத இந்து மகா சபா உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் அந்தந்த அமைப்பின் நிர்வாகிகள்  அவரவர் வீடுகளில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி வந்தனர். விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்றுமுன்தினம் இந்த அமைப்பின் நிர்வாகிகள் தாங்கள் பிரதிஷ்டை செய்து இருந்த விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். 
விநாயகர் சிலைகள் கரைப்பு 
இந்த நிலையில் நேற்று கும்பகோணம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் அந்தந்த பகுதியில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. அகில பாரத இந்து மகா சபா ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் செந்தில்குமார் தனது இல்லத்தில் பிரதிஷ்டை செய்த விநாயகர் சிலையை கும்பகோணம் அரசலாற்றில் கரைத்தார்.
இதேபோல் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா மாநில செயலாளர் பாலா, அகில பாரத இந்து ஆன்மிக பேரவை மாநில செயலாளர் கண்ணன், மாநில தலைவர் துரை. திருவேங்கடம், பா.ஜனதா மாவட்ட தலைவர் சதீஷ்குமார் உள்ளிட்டோர்  அவரவர் இல்லத்தில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை கும்பகோணம் பகவத் படித்துறை காவிரி ஆற்றில் கரைத்தனர். கும்பகோணம் பகுதியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி வைக்கப்பட்டிருந்த 8 விநாயகர் சிலைகள் நேற்றுமுன்தினம் கரைக்கப்பட்டன.

மேலும் செய்திகள்