தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3 ஆயிரத்து 653 வழக்குகளுக்கு தீர்வு

திண்டுக்கல் உள்பட 10 இடங்களில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3 ஆயிரத்து 653 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2021-09-11 20:05 GMT
திண்டுக்கல்:
திண்டுக்கல் உள்பட 10 இடங்களில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3 ஆயிரத்து 653 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
தேசிய மக்கள் நீதிமன்றம் 
தமிழகம் முழுவதும் நேற்று நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளுக்கு தீர்வு காணும் வகையில், தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், நத்தம், வேடசந்தூர் உள்பட 10 நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
இதையொட்டி ஒவ்வொரு நீதிமன்றத்திலும் நீதிபதி, வக்கீல்களை கொண்ட அமர்வு அமைக்கப்பட்டன. இந்த அமர்வு முன்னிலையில் வழக்குகள் விசாரிக்கப்பட்டது. இதற்காக சம்பந்தப்பட்ட வழக்குகளில் தொடர்புடைய இருதரப்பினரும் நேரில் வரவழைக்கப்பட்டு சமரச பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காணப்பட்டது.
3 ஆயிரத்து 653 வழக்குகள் 
இதில் திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்துக்கு மாவட்ட நீதிபதி ஜமுனா தலைமை தாங்கி பேசினார். நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் புவனேஸ்வரி முன்னிலை வகித்தார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பாரதிராஜா வரவேற்றார். இதில் நீதிபதிகள் மீனாசந்திரா, சாமுண்டீஸ்வரி, லலிதாராணி, தமிழரசி, கார்த்திகேயன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மேலும் வாகன விபத்து வழக்கில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. இதேபோல் மாவட்டம் முழுவதும் வங்கி வராக்கடன், கல்வி கடன், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் உள்பட மொத்தம் 5 ஆயிரம் வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. அதில் 3 ஆயிரத்து 653 வழக்குகள் தீர்வு காணப்பட்டது. அதன்மூலம் ரூ.8 கோடியே 88 லட்சத்து 93 ஆயிரத்து 112 தீர்வு தொகையாக வழங்கப்பட்டது. அதில் 126 மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் மட்டும் ரூ.4 கோடியே 60 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

மேலும் செய்திகள்