சேலத்தில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் பாட்டிலால் குத்தி கார் டிரைவர் கொலை உறவினர்கள் போராட்டம்

சேலத்தில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் பாட்டிலால் குத்தி கார் டிரைவர் கொலை செய்யப்பட்டார். இதனால் அவரது உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-09-11 21:05 GMT
அன்னதானப்பட்டி
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கார் டிரைவர்
சேலம் அன்னதானப்பட்டியை அடுத்த சண்முக நகர் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் வீரண்ணன். இவருடைய மகன் கோவிந்தராஜ் (வயது 33). இவர், வாடகை கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (40). நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று மதியம் தாதகாப்பட்டி வேலுநகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றனர். பின்னர் அவர்கள் கடையில் மது வாங்கிக்கொண்டு அங்குள்ள பழைய கட்டிடத்தில் அமர்ந்து மது அருந்தினர்.
அப்போது, கோவிந்தராஜ் வைத்திருந்த மதுவை ஜெயக்குமார் திடீரென எடுத்து அருந்தி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போதை தலைக்கு ஏறியதும் ஒருவருக்கு ஒருவர் மது பாட்டில்களை உடைத்து தாக்கிக்கொண்டனர்.
பாட்டிலால் குத்திக்கொலை
இதையடுத்து ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த ஜெயக்குமார், காலி மதுபாட்டிலை உடைத்து கோவிந்தராஜின் மார்பு, கழுத்து பகுதிகளில் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் கீழே மயங்கி விழுந்தார். 
இது குறித்து தகவல் அறிந்தவுடன் கோவிந்தராஜின் உறவினர்கள் அங்கு விரைந்து சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி கோவிந்தராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். 
இந்த கொலை சம்பவம் தொடர்பாக அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து கோவிந்தராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
உறவினர்கள் போராட்டம்
சம்பவத்தின் போது ஏற்பட்ட மோதலில் ஜெயக்குமாருக்கும் மது பாட்டிலால் குத்து விழுந்தது. இதனால் அவரும் படுகாயம் அடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 
இதனிடையே, கொலை செய்யப்பட்ட கோவிந்தராஜின் உறவினர்கள் உடனடியாக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கோவிந்தராஜின் கொலைக்கு காரணமானவரை உடனடியாக கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அன்னதானப்பட்டி போலீசார் ஆஸ்பத்திரிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். 
மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததா? அல்லது முன்விரோதம் காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலையுண்ட கோவிந்தராஜூக்கு திருமணமாகி மனைவியும், 1½ வயது குழந்தையும் உள்ளனர். 

மேலும் செய்திகள்