விஜயாப்புராவில் மீண்டும் நிலநடுக்கம்

விஜயாப்புரா மாவட்டத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் உள்ளனர்.

Update: 2021-09-11 21:44 GMT
விஜயாப்புரா: விஜயாப்புரா மாவட்டத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் உள்ளனர்.

விஜயாப்புரா, பாகல்கோட்டை

கர்நாடக-மராட்டிய எல்லையில் அமைந்து உள்ளது விஜயாப்புரா, பாகல்கோட்டை மாவட்டங்கள். இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மராட்டிய மாநிலம் கோலாப்பூர், விஜயாப்புரா, பாகல்கோட்டை மாவட்டங்களில் சில பகுதிகளில் திடீரென நிலநடுக்கம் உண்டானது. இதனால் வீடுகள் குலுங்கின. பாத்திரங்களும் உருண்டோடின. இதனால் மக்கள் பீதி அடைந்தனர்.

இதுகுறித்து அறிந்ததும் கர்நாடக மாநில இயற்கை பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது கோலாப்பூரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கத்தால் விஜயாப்புரா, பாகல்கோட்டையிலும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது தெரியவந்தது.

மீண்டும் நிலநடுக்கம்

இந்த நிலையில் நேற்று காலை விஜயாப்புரா மாவட்டத்தில் மீண்டும் திடீரென நிலநடுக்கம் உண்டானது. காலை 8.18 மணி முதல் 8.20 மணி வரை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் வீடுகள் லேசாக குலுங்கியது. மேலும் வீடுகளில் இருந்த பாத்திரங்கள், பொருட்கள் கீழே விழுந்து உருண்டோடின. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு அலறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். 

இதுபற்றி தகவல் அறிந்ததும் கர்நாடக மாநில இயற்கை பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு சென்று விசாரித்தனர்.

அப்போது கோலாப்பூரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தான் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது என்றும், இதற்காக பயப்பட தேவை இல்லை என்றும் மக்களிடம் கூறினர். நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் 3.9 ரிக்டர் அளவில் பதிவாகி இருந்தது. ஒரே வாரத்தில் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் விஜயாப்புரா மாவட்ட மக்கள் பீதியில் உள்ளனர்.

மேலும் செய்திகள்