மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

திருச்சி மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2021-09-11 21:52 GMT
சமயபுரம்:
திருச்சி மாநகராட்சியை விரிவுபடுத்தும் வகையில் பக்கத்தில் உள்ள ஊராட்சிகளை சேர்க்க அரசு திட்டமிட்டு உள்ளது. இந்நிலையில் சமயபுரம் அருகே உள்ள மாடக்குடி ஊராட்சியையும் திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதை அறிந்த அந்த கிராம மக்கள், மாநகராட்சியுடன் இணைத்தால் 100 நாள் வேலை திட்டம் பறிபோகும், குடிநீர் கட்டணம் உயரும் என்று கூறி, மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை ஊராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெயசீலன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி சமயபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல் மாதவப்பெருமாள் கோவில் ஊராட்சியை திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பாக நேற்று ஊராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி பாதுகாப்பு பணியில் மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.
ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்பட்சத்தில் பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்திருந்தநிலையில், அவர் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக நேற்று மண்ணச்சநல்லூர் பகுதிக்கு வந்திருந்தபோது இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்