கடலூரில் விநாயகர் சிலைகள் கரைத்த இடத்தில் தீ விபத்து

கடலூரில் விநாயகர் சிலைகள் கரைத்த இடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

Update: 2021-09-12 19:30 GMT
கடலூர், 

விநாயகர் சதுர்த்தி விழா அன்று வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை கடலூர் சில்வர் பீச்சில் தனிநபராக சென்று கரைக்கலாம் என்று காவல்துறை அறிவித்து இருந்தது. ஆனால் நேற்று திடீரென சில்வர் பீச்சுக்கு சென்று சிலைகளை கரைக்க போலீசார் தடை விதித்தனர். இதையடுத்து விநாயகர் சிலைகளை கரைக்க மாற்று இடமான உப்பனாற்றை தேர்வு செய்தனர். அதன்படி சில்வர் பீச்சுக்கு செல்லும் வழியில் உள்ள உப்பனாற்றில் பொதுமக்கள் சிலைகளை வைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டு கரைத்தனர்.

தீப்பிடித்து எரிந்தது

காலை 11 மணி அளவில் ஒரு தம்பதி விநாயகர் சிலையை வைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். அப்போது அந்த கற்பூரம் கரையோரம் இருந்த காய்ந்த செடி, கொடிகள், முட்செடிகள் மீது பட்டு தீப்பிடித்து எரிந்தது. சற்று நேரத்தில் தீ மள, மளவென பரவியதால், விநாயகர் சிலைகளை கரைக்க வந்த பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர்.

இது பற்றி கடலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருப்பினும் அதில் காய்ந்த பனை மர துண்டுகள் கிடந்ததால், தீ நீண்ட நேரம் எரிந்தது. புகை மண்டலமாகவும் இருந்தது. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை முழுமையாக அணைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்