செங்கல்பட்டு மாவட்டத்தில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த நிரந்தர முகாம்கள் செயல்படும் - கலெக்டர் ராகுல் நாத் பேட்டி

செங்கல்பட்டு மாவட்டத்தில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த நிரந்தர முகாம்கள் செயல்படும் என கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்தார்.

Update: 2021-09-13 00:43 GMT
தாம்பரம்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் 918 இடங்களில் நேற்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. தாம்பரம் பேபி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவருடன் செங்கல்பட்டு மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் சேகர், தாம்பரம் நகராட்சி கமிஷனர் லட்சுமணன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடன் வந்தனர்.

பின்னர் நிருபர்களிடம் கலெக்டர் ராகுல்நாத் கூறியதாவது:-

செங்கல்பட்டு மாவட்டத்தில் 1 லட்சம் பேருக்கு இலக்கு நிர்ணயித்து 918 சிறப்பு முகாம்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 50 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி போடப்பட்டாலும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த மாவட்டம் முழுவதும் நிரந்தர முகாம்கள் தொடர்ந்து செயல்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், மண்ணிவாக்கம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமை வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரிகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதில் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பு குழு உறுப்பினர் எம்.டி.சண்முகம், ஊராட்சி மன்ற செயலர் ராமபக்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் நடந்த முகாம்களை மருத்துவ அதிகாரி டாக்டர் சுரேஷ், அச்சரப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமா, மாலதி, அச்சரப்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் எழிலரசன் கண்காணித்தனர்.

மேலும் செய்திகள்