கூடலூர் ஒட்டாண்குளம் தலை மதகு பகுதி சீரமைப்பு

கூடலூர் ஒட்டாண்குளம் தலை மதகு பகுதி சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

Update: 2021-09-13 11:24 GMT
கூடலூர்:
கூடலூர் நகராட்சியின் மைய பகுதியில் ஒட்டாண்குளம் அமைந்துள்ளது. 37.65 ஏக்கர் பரப்பளவும், 1323 மீட்டர் நீளமும் கொண்ட இக்குளத்திற்கு மழைக்காலங்களில் சுரங்கனார் நீர்வீழ்ச்சியிலிருந்து வரும் மழை நீரும், முல்லைப்பெரியாற்றிலிருந்து 18-ம் கால்வாய் வழியாகவும் தண்ணீர் கொண்டுவரப்பட்டு தேக்கிவைக்கப்படுகிறது. இந்த குளத்து தண்ணீர் மூலம் இப்பகுதியில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் இப்பகுதியிலுள்ள கால்நடைகளுக்கு குடிநீராகவும் பயன்படுகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் பெய்த மழையால் மண்அரிப்பு ஏற்பட்டு ஒட்டாண்குளம் தலை மதகு பகுதியையொட்டிய கரைப்பகுதியின் தடுப்புச்சுவர்கள் இடிந்து விழுந்தது. இதனால் ஒட்டாண் குளத்தின் கரை பகுதி மேலும் இடிந்துவிழும் அபாய நிலையில் இருந்தது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதை ஏற்று பொதுப்பணித்துறையினர் இடிந்து விழுந்த தலை மதகு பகுதியில் நேற்று முதல் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டுவருகின்ரனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

மேலும் செய்திகள்