வாகனங்களுக்கு வாடகை வழங்க ஓட்டுனர்கள் கோரிக்கை

வாகனங்களுக்கு வாடகை வழங்க ஓட்டுனர்கள் கோரிக்கை

Update: 2021-09-13 16:22 GMT
திருப்பூர், 
தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட வாகனங்களுக்கு வாடகையை வழங்க வேண்டும் என்று டிரைவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்தனர். மனு கொடுக்க முண்டியடித்தால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சிவகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுமக்களிடம் இருந்து வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டு, சாலைவசதி, குடிநீர் வசதி கோரி 813 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
தள்ளு-முள்ளு
இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு பொதுமக்கள் அதிக அளவில் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர். பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வரிசையில் நின்று மனுக்களை பதிவு செய்து அதன்பிறகு அதிகாரிகளிடம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஒரு கட்டத்தில் ஆண்களும், பெண்களும் முண்டியடித்துக்கொண்டு குறைதீர்க்கும் கூட்ட அரங்குக்கு முன்பு வந்தனர்.
போலீசார் அவர்களை கட்டுப்படுத்த முயன்றும் முடியவில்லை. இதனால் அங்கு தள்ளு-முள்ளு ஏற்பட்டது. பின்னர் மக்கள் மொத்தமாக உள்ளே சென்று மனுக்களை கொடுத்தனர். இதனால் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.
வாடகை வழங்கப்படவில்லை
கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் சங்கத்தினர் அளித்த மனுவில், ‘சட்டமன்ற தேர்தல் பணிக்காக ஒப்பந்த அடிப்படையில் 350-க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் இயக்கப்பட்டன. தேர்தல் முடிந்து பல நாட்கள் ஆகியும் அந்த வாகனங்களுக்கான வாடகை தொகை இந்த நாள் வரை வழங்கப்படாமல் உள்ளது. பலமுறை வாகனங்களை இயக்கியதற்காக, தாசில்தார் அலுவலகங்களிலும் மற்றும் தேர்தல் பிரிவில் கோரிக்கை விடுத்தும் தேர்தல் பணிக்காக இயங்கிய வாகனங்களுக்கான தொகை கிடைக்கவில்லை.
கொரோனா 2-வது அலை காரணமாக சுற்றுலா வாகனங்கள் இயங்க முற்றிலும் தடைவிதிக்கப்பட்டது. இதனால் எங்கள் வாழ்வாதாரம் முழுவதுமாக பாதிக்கப்பட்டது. தேர்தல் முடிந்து 3 மாதங்கள் ஆகிய பிறகும் எங்களுக்கான வாடகை வழங்கப்படாமல் உள்ளது. வாகன பராமரிப்பு, குடும்பத்தை கவனிக்க போதிய நிதி இல்லாமல் சிரமமாக உள்ளது. எங்களுக்கான வாடகை தொகையை பெற்றுக்கொடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.  

மேலும் செய்திகள்